(Source: ECI/ABP News/ABP Majha)
கரூர் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும் சரிவு; தொழிலாளர்களுக்கு பணி பாதிப்பு
உற்பத்தியாளர்களுக்கு வேண்டிய நூல் கிடைப்பதில்லை. கடந்த ஆண்டுகளை மதிப்பிடும்போது இப்போது 70, 80 சதவீத ஆர்டர் வரத்து குறைந்துள்ளது.
கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த இரண்டு மாதமாகவே தடுமாறுகிறது. கரூரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். சில கோடி ரூபாய் முதல் பல கோடி வரை ஏற்றுமதி செய்யக்கூடிய ஜவுளி நிறுவனங்கள் உலகில் உள்ள பெரும்பாலன நாடுகளுக்கு, தங்களின் வீட்டு உபயோக ஜவுளிகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஆண்டுக்கு பத்தாயிரம் கோடிக்கு ஏற்றுமதியில் சாதனை படைத்தவர்கள் வரும் 2030-ம் ஆண்டிற்குள் இந்த ஏற்றுமதியை 25 ஆயிரம் கோடி உயர்த்தி திட்டம் தீட்டி செயல்பட்டு வந்தனர். கொரோனா காலத்தில் கடும் வீழ்ச்சி சந்தித்த இந்தத் தொழிலை, கொரோனா காலத்துக்கு பின் எப்படியாவது உயர்த்த வேண்டும் என்று வகையில் மேற்கொண்ட கடுமையான உழைப்பினால் இதுவரை ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இல்லாத அளவிற்கு வழக்கத்தை விட 26 சதவீதம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்தது. இந்த நிலையை அடுத்தடுத்த ஆண்டுகளில் உயர்த்திடும் போது ஜவுளி ஏற்றுமதி ரூ.25,000 கோடியை தாண்டி விடும் என்ற நம்பிக்கையில் தொழிலை தொடர்ந்து வந்தனர்.
கொரோனாவை விட மிகப்பெரிய வைரஸ் போல் கண்ணுக்குத் தெரியாத நூல் விலை, பருத்தி விலை உயர்வு ஜவுளி தொழிலை சில மாதங்கள் ஆட்டி வித்தது. மத்திய, மாநில அரசுகளின் அடுத்தடுத்த திட்டங்களால் நூல் விலை குறைய தொடங்கிய நேரத்தில், அடுத்த இடியாக வெளிநாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, தேக்க நிலை ஜவுளி ஆர்டர்களுக்கு பெரிய முட்டுக்கட்டையாக அமைந்து விட்டது. கடந்த இரண்டு மாதங்களாகவே கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி பெரிய அளவில் நடைபெறவில்லை. தினமும் ஒரு லட்சம் பேர் வரை இத்தொழில் சார்ந்து வந்தவர்களில் 50 ஆயிரம் பேர் கூட தொழிலுக்காக வருவதில்லை. நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மட்டுமின்றி, காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
ஒரு சில நிறுவனங்கள் ஜப்பான் உள்ளிட்ட வேறு சில நாடுகளுக்கு தங்களின் ஜவுளிகளை அனுப்பி வருகின்றனர். இது தவிர பருத்தி நூல் விலை ஏறுவதும், இறங்குவதுமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. பெரும்பாலான மில்களில் நூல் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளனர் அல்லது தேவைக்கு ஏற்ப தான் உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தியாளர்களுக்கு வேண்டிய நூல் கிடைப்பதில்லை. கடந்த ஆண்டுகளை மதிப்பிடும்போது இப்போது 70,80 சதவீத ஆர்டர் வரத்து குறைந்துள்ளது.
கரூரில் பல பெரிய டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் வாரத்தில் விடப்படும் ஒருநாள் விடுமுறை, இரு நாட்களாக சிலர் 3 நாட்களாக அதிகரித்துள்ளனர். சில நிறுவனங்களில் பணியாளர்களை நிர்வாகியாக பிரித்து ஒரு பாதினர் மறுநாளும் மாறி மாறி பணிபுரியும் வகையில் செயல்படுகின்றனர். 2021, 22 மார்ச் மாதத்திற்குள் கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி விளக்கத்தைவிட 26 சதவீதம் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 2023 மார்ச் மதத்திற்குள் வழக்கத்தைவிட இன்றைய நிலையில் 30 சதவீதம் குறைவாகவே உள்ளது. மார்ச் மாதத்திற்குள் மேலும் சில சதவீதம் ஏறும் என்ற நிலை உள்ளது. இப்போதைய இந்த ஆர்டர் கிடைக்காத நிலை வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும் அதற்கு பின்னர் வழக்கமான சூழ்நிலை ஏற்படும் என்றும் கருதுகிறோம். ஏற்றுமதியாலர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த வட்டி மானியம் ஐந்து சதவீதமாக இருந்ததை, இப்போது மூன்று சதவீதமாக குறைந்துவிட்டது. இதனால் இரண்டு சதவீதம் வட்டி மானியம் இழப்பு ஏற்பட்டுள்ளது அதோடுமில்லாமல் வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டி மூன்று முறைகளில் மட்டும் 1.5% அதிகரித்துள்ளது.
இதனால், ஜவுளி வர்த்தகர்கள் மொத்தம் 3.5 சதவீதம் வட்டி இழப்பை சந்தித்துள்ளன. இப்படி இழந்து நிற்கும் கரூர் ஜவுளி வர்த்தகத்தில் கிராமப்புற பின்னணியிலிருந்து உழைக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் ஜவுளி தொழிலை பாதுகாக்க அவசர தீர்வுகள் தேவை ஜவுளி தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டிய நேரம் என்றனர்.