Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்களுக்கு வரப்போகுது குட்நியூஸ்- எப்போ தெரியுமா.?
அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பழையை ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முக்கிய முடிவு வெளியாகவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்
அரசு ஊழியர்கள் தான் மக்களுக்கும்- அரசுக்கும் இடையே பாலமாக இருந்து திட்டங்களை கொண்டு சேர்த்து வருகிறார்கள். அரசு என்ன தான் ஒரு திட்டங்களை அறிவித்தாலும் அந்த திட்டங்கள் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்க அரசு ஊழியர்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எனவே மக்களுக்காக பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு சலுகைகளை அரசும் வழங்கி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியும் வழங்கியது. மகப்பேறு விடுப்பு காலம் அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பு நாட்களுக்கு பணப்பலன் என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
இருந்த போதும் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பது மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது தான். 2003 ஏப்ரல் 1 முதல் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு பல பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என போராட்டங்களிலும் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டது.
ஓய்வூதியம் குழு அமைத்த தமிழக அரசு
இதனையடுத்து அரசு ஊழியர்கள் சங்கம், நிதித்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களோடு ஆலோசனையும் அக்குழு நடத்தியது. இதனையடுத்து இடைக்கால அறிக்கை சமர்பித்த நிலையில் விரைவில் எந்த ஓய்வூதிய திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு பயன் என அறிக்கை அளிக்கவுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் ஏங்கெல்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2003ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தில் விதிமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை. இதனையடுத்து மத்திய அரசு கடந்த 2013ஆம் ஆண்டில் ஓய்வூதிய நிதி தொடர்பாக ஆணையம் ஏற்படுத்தி பல்வேறு வழிகாட்டுதலை வெளியிட்டது. ஆனால் அதனையும் தற்போது வரை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லையென மனுவில் தெரிவித்திருந்தார்.
ஒரு வார காலத்தில் பதில்- நீதிமன்றம் உத்தரவு
மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கொடுத்த அறிக்கையை பின்பற்றி விதிமுறைகளோ அல்லது அரசானையோ வெளியிடவில்லையெனவும் இதனால் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் அரசு ஊழியர்கள் தவிப்பதாக கூறியிருந்தார். எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், குமரப்பன் கொண்ட அமர்வு ஓய்வூதியம் தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் மனுதாரருக்கு தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். எனவே தமிழக அரசு ஒரு வார காலத்திற்குள் ஓய்வூதியம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.






















