சட்டவிரோத மது விற்பனையை எப்படி அனுமதிக்கின்றனர் – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி
சட்டவிரோத மது விற்பனை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: சட்டவிரோத மது விற்பனையை காவல்துறையினர் எப்படி அனுமதிக்கின்றனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், காவல்துறை அலட்சியத்தால்தான் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
கள்ளச்சாராயம் விவகாரம்:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்திய பலருக்கு, கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து, உடனடியாக அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிலரின் நிலை மோசமடைந்ததால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி:
இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையை காவல்துறையினர் எப்படி அனுமதிக்கின்றனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், காவல்துறை அலட்சியத்தால்தான் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும், சட்டவிரோத மது விற்பனை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு துணைபோன காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை தேவை என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுவிற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அஇஅதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் , சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. அஇஅதிமுக மனுவில், உயிரிழந்தவர்களின் உடல்களை நேர்மையாக பரிசோதனை செய்ய உத்தரவிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கானது நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.