Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ்க்கு ஒதுக்கப்பட்டது வெறும் 12 கோடி - ஆர்.டி.ஐ. சட்டத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
மதுரை எய்ம்ஸ் விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சமீப காலமாக அரசியலில் பெரும் பேசு பொருளாக இருந்து வரும் விவகாரம் மதுரை எய்ம்ஸ். இது தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழ்நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத பிரச்னையாக எய்ம்ஸ் விவகாரம் மாறிவிட்டது.
தொடர் சர்ச்சை:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை மறைந்த பாஜக தலைவரும் முன்னாள் நிதித்துறை அமைச்சருமான அருண் ஜெட்லிதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது முதன்முதலில் வெளியிட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியான நிலையில், 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி மருத்துவமனைக்கான அடிக்கலை நாட்டினார். இருப்பினும், மருத்துவமனை அமைப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின், மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைய இந்த விவகாரத்தைதான் கையில் எடுத்தார்.
மருத்துவமனை கட்டுவதாக கூறி, ஒரே ஒரு செங்கலை மட்டுமே வைத்திருப்பதாகக் கூறி ஊர் ஊராக பிரசாரம் செய்தார் உதயநிதி. மக்கள் மத்தியில், அந்த பிரசாரம் பெரிய அளவில் ஏடுபட்டது என்றே சொல்ல வேண்டும்.
அதிர்ச்சி தகவல்:
இப்படி, மதுரை எய்ம்ஸ் விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பணம்தான் ஒதுக்கப்பட்டதா?
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மொத்தம் 1,977.8 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், 12.35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடையும் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மதுரை எய்ம்ஸ் குறித்து தமிழ்நாட்டு எம்பிக்கள் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருவதாக சரமாரி குற்றச்சாட்டு சுமத்தினார்.
மதுரை எய்ம்ஸ் குறித்து எதிர்கட்சியினர் தவறான தகவல்களை அளித்து வருவதாக கூறிய மத்திய அமைச்சர், "எய்மஸ் கல்லூரியில் மருத்துவ படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என பதில் அளித்திருநதார்.
வேறு மாறியான தகவல் அளித்த பாஜக தேசிய தலைவர்:
தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பாஜக தேசிய தலைவர் நட்டா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்" என விளக்கம் அளித்திருந்தார்.