Road Show Guidelines: ரோட் ஷோ நிபந்தனைகள், முன்பணம் எவ்வளவு.? ஜன.5 ஆம் தேதி வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
Road Show Guidelines: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ–க்கள் தொடர்பான இறுதி வழிகாட்டு விதிமுறைகளை ஜனவரி 5 ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் கரூர் கூட்டம்- 41 பேர் பலி
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய், மக்களை சந்திக்கும் வகையில் திட்டமிட்டார். இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் இரண்டு மாவட்டங்களில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் திருச்சி, அரியலூர்,நாகை, திருவாரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பிரச்சார பயணத்தை முடித்திருந்தார். அடுத்ததாக கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் நிலையான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி அதிமுக, த.வெ.க, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மதுரையைச் சேர்ந்த திருக்குமரன், பிரகாஷ் உள்ளிட்ட தனிநபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
ரோட் ஷோ, பொதுக்கூட்டம்- வழிகாட்டு நெறிமுறை
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு சார்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அப்போது ரோட்ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்பாகவும், அபராதம், முன்பணம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று, பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
மேலும் அதிமுக, த.வெ.க. ஆகியர் சார்பிலும் ஆலோசனைகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து மற்ற அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் எனவும் அரசுத்தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரோட் ஷோ மற்றும் பொதுக்கூட்டம் தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்த்து. இதனையடுத்து இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், பொதுக் கூட்டம், பேரணி, ரோடு ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்திருந்த கட்சிகள் சார்பில் ஏராளமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
ஜனவரி 5ஆம் தேதி வெளியிட உத்தரவு
இந்த ஆலோசனைகள் அனைத்தையும் பரிசீலித்து, வருகிற ஜனவரி 5 ம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பின், வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், அதுசம்பந்தமாக தனியாக வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.





















