“பள்ளியை வழக்கம்போல நடத்தலாம்” - கலவரம் நடந்த கனியாமூர் பள்ளி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலவரம் நடந்த தனியார் பள்ளியில் அனைத்து வகுப்புகளையும் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
![“பள்ளியை வழக்கம்போல நடத்தலாம்” - கலவரம் நடந்த கனியாமூர் பள்ளி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு Madras High Court ordered Kallakurichi private school to conduct all classes “பள்ளியை வழக்கம்போல நடத்தலாம்” - கலவரம் நடந்த கனியாமூர் பள்ளி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/9a56bd93815b762633940fa0576b77b41677584143762572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலவரம் நடந்த தனியார் பள்ளியில் அனைத்து வகுப்புகளையும் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூரில் பள்ளி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். தனியார் பள்ளியின் விடுதியில் மாடியில் இருந்து அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்பட்டது. இதுதொடர்பாக சின்னசேலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால் அதற்குள் மாணவி உயிரிழந்தது தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி மக்கள் என நூற்றுக்கணக்கானோர் பள்ளி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்தனர். போராட்டம் கலவரமாக மாறத் தொடங்கியது. தடுக்க வந்த காவல்துறையினர் மீதும், அவர்கள் வாகனத்தின் மீது கற்கள் வீசப்பட்ட நிலையில் பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மூடப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது.
நிபந்தனையுடன் திறக்கப்பட்ட பள்ளி
இதற்கிடையில் பள்ளியை நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு தரப்பும் ஆய்வு செய்வு செய்ததாகவும் தெரிவித்தது. மேலும் பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் சோதனை அடிப்படையில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் மாணவர்களுக்கு ஒரு மாத காலம் நேரடி வகுப்புகளை நடத்த சில நிபந்தனையுடன் உத்தரவிட்டது. அதன்படி பள்ளியும் திறக்கப்பட்டது.
அனைத்து வகுப்புகளையும் நடத்த அனுமதி
இந்நிலையில் கனியாமூர் பள்ளியில் மார்ச் முதல் வாரத்தில் இருந்து எல்.கே.ஜி. முதல் அனைத்து வகுப்புகளையும் முழுமையாக நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. முன்னதாக இறந்த மாணவியின் தாய் பள்ளியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவும் ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் குழந்தைகளின் தைரியத்துக்காக பெற்றோரையும் பள்ளிக்கு வர அனுமதிக்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளியின் 3வது தளத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)