'ஆகம கோயில்களுக்கு அர்ச்சகர் நியமன அரசு விதி பொருந்தாது’ - கோர்ட் உத்தரவு இதுதான்! முழு விவரம்
ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களுக்கு அர்ச்சகர் நியமன அரசு விதி பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில்,18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அர்ச்சகர்கள் நியமனம், இந்த வழக்குளின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என 2021 அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது. பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தது.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்..
கடந்த 2020ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதியின்படி அறங்காவலர் மட்டுமின்றி தக்காரும் நியமன அதிகாரியாக வரையறுக்கப்பட்டுள்ளனர். அறங்காவலர்கள் இல்லாதபோது தக்கார் நியமிக்கப்படுகின்றனர். அர்ச்சகர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கே உரிமை உள்ளது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அறங்காவலர்கள் இல்லாதபோது கோவில் செயல்பாடுகளை கவனிக்கவே தக்கார் நியமனம் செய்யப்படுகிறார். ஆகவே நியமன அதிகாரியாக விதியில் குறிப்பிட்டவர்களை சட்டத்துக்கு எதிரானதாக கூற முடியாது. அதேநேரம் தக்காருக்கும் காலவரையறை உண்டு. காலவரையறையின்றி தக்கார் நீடிக்கக் கூடாது.விரைவில் அறங்காவலர்களை நியமனம் செய்ய வேண்டும்.
அப்போதுதான் கோவில் அறங்காவலர்கள் வசம் இருக்கும். அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு என்ன தகுதி, வயது குறித்து 7 மற்றும் 9தாவது விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த விதியில் ஓராண்டு சான்றிதழ் வழக்குப்பு அர்ச்சகர் பணிக்கு தகுதியாகவும், பல ஆண்டுகள் பூஜை செய்வதில் அனுபவம் இருந்தாலும் உரிய தகுதி இல்லை என்றால் அவர்களை நியமிக்க முடியாது எனவும் விதி கூறுகிறது. இந்த விதிகளை சட்டவிரோதமானது எனக்கூற முடியாது. ஏனென்றால் இந்த விதிகள் அர்ச்சகர்களுக்கு மட்டுமின்றி இதர பணியிடங்களுக்கும் பொருந்தும். எனவே இந்த விதிகளை ரத்து செய்தால் அர்ச்சர் தவிர்த்து மற்ற விதிமுறைகளில் வழிகாட்டுதல் இல்லாமல் போய்விடும், அதேநேரம் ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது.
ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களுக்கு அர்ச்சகர் நியமனத்தை பொறுத்தவரை ஆதிசைவ சிவாச்சாரியார் நல சங்கம் மற்றும் சேஷம்மாள் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத்தான் அமல்படுத்த வேண்டும். எனவே ஆகம விதிகளின்படியான கோவில்களுக்கு ஆகமப்படித்தான் அர்ச்சர்களை நியமிக்க முடியும். அறங்காவலர்கள் அல்லது தக்கர்களே அர்ச்சகர்களை நியமிக்க முடியும். அறநிலையத்துறை அல்ல. ஆகம விதிப்படி அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றால் தனிநபர் அதனை எதிர்த்து வழக்கு தொடரலாம்.
நீதிமன்ற உத்தரவு
அதேவேளையில் ஆகம விதிப்படி கட்டபட்ட கோவில்களை அடையாளம் காண வேண்டியதுள்ளது. எந்த ஆகமவிதிப்படி கட்டப்பட்டது எனபதையும் பார்க்க வேண்டும். எனவே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐவர் குழுவை நியமிக்க அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த குழுவில் சமஸ்கிருத கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் என்.கோபாலசாமியும் இடம் பெற வேண்டும். இந்த குழுவின் ஆலோசனையின்படி ஒரு மாதத்துக்குள் இருவரை அரசு நியமிக்க வேண்டும். அலுவல்சாரா உறுப்பினராக அறநிலையத்துறை கமிஷனர் இருக்க வேண்டும். இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற கோவில்களுக்கு அல்ல. கோவில் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளதா என்பதையும் எந்த ஆகவிதிப்படி கட்டபட்டது எனப்தையும் ஐவர் குழு அடையாளம் காணும். அந்த ஆகமப்படியே அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டுமே தவிர, விதி 7 மற்றும் 9ன் படி அல்ல. என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.