Rajathi Ammal: உடல் சோர்வு.. ஜீரண கோளாறு.. சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லும் ராஜாத்தி அம்மாள்!?
பிரபல தனியார் மருத்துவமனையில் சில நாட்களாகவே சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தற்போது வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்ல அவரது மகளும் திமுக எம்.பியுமான கனிமொழி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 25ம் தேதி ராஜாத்தி அம்மாள் ஜெர்மனி செல்வார் எனக் கூறப்படுகிறது.
என்ன ஆச்சு?
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு ராஜாத்தி அம்மாள் மிகுந்த துயரத்துடன் இருந்ததாகவும், அதனால் அவர் சரியாக உணவு உட்கொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், அவருக்கு அவ்வப்போது உடல்சோர்வு, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றும் அந்த மருத்துவமனையின் மருத்துவர்களை வீட்டிற்கு வரவழைத்தும் சிகிச்சை எடுத்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் உணவு எடுத்துக்கொள்வதில் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் திட உணவுகள் எதை சாப்பிட்டாலும் அவை செரிக்காமல் ஜீரண கோளாறு பிரச்னையை ஏற்படுத்தி வருவதாகவும், அதனால் அவர் பழச்சாறு, சூப் உள்ளிட்ட திரவ உணவுகளை மட்டுமே பிரதானமாக உட்கொண்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த பிரச்சினைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சில நாட்களாகவே சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தற்போது வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
சோர்வு..
கடந்த 7ஆம் தேதி கருணாநிதி நினைவு நாளான்று, அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றபோது கூட அருகே இருந்த ஒரு பெண்ணின் உதவியோடு, அவர் கைகளை பிடித்தபடியே ராஜாத்தி அம்மாள் சிறு தடுமாற்றத்தோடு அங்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சி.ஐ.டி நகரில் உள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியபோதும் ராஜாத்தி அம்மாள் மிகுந்த சோர்வோடு காணப்பட்டார்.
ராஜாத்தி அம்மாளின் உடல்நிலை குறித்து கவலையடைந்துள்ள அவரது மகளும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டியதை உணர்ந்து, ராஜாத்தி அம்மாளை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வைக்கும் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து, அவருக்கு தேவையான உதவிகளை பெறவும் கனிமொழி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜாத்தி அம்மாள் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென திமுக தொண்டர்கள் பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

