CM Stalin: ”மோடியை விடுங்க ஆளுநர் பற்றி பேச மறுப்பது ஏன்?” எடப்பாடி பழனிசாமியை பொளந்து எடுத்த ஸ்டாலின்!
பிரதமர் மோடி பற்றி மட்டுமல்ல, ஆளுநர் பற்றி கூட எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை பேசுவது இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
”மக்களின் ஆதரவு தான் திராவிட மாடல் அரசின் சாதனை”
அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று விருதுநகர், தென்காசியில் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும், தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன். 10 தொகுதிகளிலும் நான் பயணம் செய்த போது மக்களிடம் மாபெரும் எழுச்சியை பார்க்கிறேன்.
செல்லும் இடங்களில் எல்லாம் அலை அலையாய் வந்து ஆதரவு தெரிவிக்கும் மக்கள் தான் திராவிட மாடல் அரசின் சாதனைக்கு அடையாளம். தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களும் திராவிட மாடல் அரசின் ஏதாவது ஒரு திட்டத்தால் பயன் பெறுகின்றனர். தாய்வீட்டு சீர் போன்று எங்களின் சகோதரர் ஸ்டாலின் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குகிறார் என்று தாய்மார்கள் கூறுகின்றனர்.
"கியாரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை”
மக்களை பாதிக்கும் அனைத்திலும் அலட்சியமாக ஆணவமாகவும் பாஜக இருக்கிறது. பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே சென்றது. தேர்தல் வந்ததவுடன் பெட்ரோல், டீசல் குறைக்கும் அதிகாரம் மோடிக்கு வந்துவிடும்.
தேர்தலுக்கு தேர்தல் மட்டும்தான் பிரதமர் மோடிக்கு கருணை சுரக்கும். மோடியின் வாக்குறுதிக்கும் கியாரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், "திமுகவின் அடிப்படை கொள்கையே சமூகநிதி தான். மத்திய பாஜக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஒடுக்கப் பார்க்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கு பாஜக எதிரி என்று தொடர்ந்து கூறி வருகிறோம்.மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வழங்குவது இல்லை. பாஜகவினால் சமூக நீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
”ஆளுநரை கண்டு எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறாரா?”
குலக் கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை, மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு மக்களுக்கும் துரோகம் செய்வதையே பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். தேர்தல் பத்திர முறைகேடு உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக கபட நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் மோடி பற்றி மட்டுமல்ல, ஆளுநர் பற்றி கூட எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை பேசுவது இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதை தடுக்கும் ஆளுநர் பற்றி எடப்பாடி பேச மறுப்பது ஏன்? ஆளுநரை கண்டு எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறாரா?
அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுக்கும் ஆளுநரின் செயல் சட்டமன்றத்தை இழிவுப்படுத்துவதாகும். மக்களாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டால் எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் கண்டிப்போம்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.