CM Stalin: "ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுகிறது" திருச்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் விளாசல்!
ராஜ்பவனில் இருந்தே தேர்தல் பிரச்சார தொடங்கியதாக ஆளுநரிடம் கூறிவிட்டு வந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக:
இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளதோடு தேர்தலையும் சந்திக்கிறது.
இதற்கான தொகுதி பங்கீடும் சுமூகமாக முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்கான தனது பரப்புரையை திருச்சியில் தொடங்கி இருக்கிறார். பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை ஆதரித்து பரப்ரை மேற்கொள்கிறார். இந்த நிலையில், பரப்புரை பொதுகூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
"ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுவது கோழைத்தனமானது”
அவர் பேசியதாவது, "திருச்சி என்றாலே திருப்பு முனைதான். திமுகவை தொடங்குவது என முடிவெடுத்தது திருச்சியில் தான். திருச்சி பாதை எப்போதும் வெற்றிப்பாதை என்பதற்கு அடையாளமாக 6 முறை மக்கள் வெற்றியை தந்துள்ளனர். பாஜக ஆட்சியை வீழ்த்தி, மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவே இந்த தேர்தல். தேர்தல் நேரத்தில் தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். தனது ஆட்சி முடியப்போகிறது என பிரதமர் மோடிக்குத் தான் தூக்கம் வரவில்லை.
10 ஆண்டுகால நாட்டை ஆண்ட பிரதமரால் தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்பு திட்டம் ஒன்றையாவது சொல்ல முடியுமா? தமிழ்நாட்டுக்கு கொடுத்த திட்டம் என்ன என்று பலமுறை கேள்வி எழுப்பியும் பிரதமர் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை. தோல்வி பயம் பிரதமர் மோடியின் முகத்திலும், கண்ணிலும் தெரிகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ராஜ்பவனில் இருந்தே தேர்தல் பிரச்சார தொடங்கியதாக ஆளுநரிடம் கூறிவிட்டு வந்தேன். அவர் உடனே 'Best Of Luck' என்று செல்லி அனுப்பினார். ராஜ்பவனில் தொடங்கிய இந்த பயணம் குடியரசுத் தலைவர் மாளிகை வரை செல்லவிருக்கிறது. இன்றைக்கு போல், வரலாற்றில் வேறு எந்த ஆளுநரையாவது நீதிமன்றம் இப்படி கடுமையான கேள்விகள் கேட்டிருக்கிறதா? அப்படிப்பட்ட கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது.
மக்களை எதிர்கொள்ள பயன்படும் பாஜக, அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி போன்ற புலனாய்வு அமைப்புகள் மூலமாகவும், ஆளுநர்கள் மூலமாகவும் எதிர்கொள்வது கேழைத்தனம். இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி என்று ஜூன் 4ஆம் தேதி வரவிருக்கும் செய்தி உங்கள் தூக்கத்தைத்தான் தொலைக்கப் போகிறது. தமிழர்களை கொச்சைப்படுத்தத் தொடங்கிவிட்டது பாஜக. தமிழ்தான் மூத்த மொழி என்று பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆனால், இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்” என்றார்.