Video : திடீரென ஒலித்த 'ரத்தக்கொதிப்பு ரத்தக்கொதிப்பு’ ரிங்டோன்! செய்தியாளர் சந்திப்பில் டென்ஷனான சீமான்!
'மைக்' சின்னத்தை அறிமுக்கப்படுத்தி செய்தியாளர்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Seeman: 'மைக்' சின்னத்தை அறிமுக்கப்படுத்தி செய்தியாளர்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன.
'மைக்' சின்னம்:
கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி பெரிய போராட்டத்திற்கு பிறகு மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
நாம் தமிழகர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதை கருத்தில் கொண்டு புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது.
அதன்படி, அனுப்பிய சின்னங்களில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி, இன்று மைக் சின்னத்தை அறிமுக்கப்படுத்தி செய்தியாளர்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமானை கடுப்பாக்கிய ’ரத்தக்கொதிப்பு’ பாடல்:
அப்போது, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் சீமான் வெளியிட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பில் நடந்த ஒரு சம்பவம் அங்கிருந்த நாதக தொண்டர்களை கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதாவது, சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசத் தொடங்கினார்.
அப்போது, செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானுக்கு பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங்டோனில், 'ரத்தக்கொதிப்பு ரத்தக் கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்தக் கொதிப்பு' என்கிற பாடலுடன் சத்தமாக அலறியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சீமான், பேட்டியை நிறுத்திவிட்டு பின்னர் திரும்பி, அந்த நிர்வாகியை முறைத்து பார்த்து கடுப்பானார்.
சீமான், நாதக நிர்வாகிகளை கோபமடைய வைத்த 'ரத்தக் கொதிப்பு’ பாடலின் ரிங்டோன் நபர் அங்கிருந்து வேகமாக வெளியேறியும் விட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு ’மைக்’ சின்னத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள நிலையில், சீமானை செய்தியாளர் சந்திப்பில் நாதக நிர்வாகி கடுப்பாக்கிய சம்பவம் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க
கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்; பாஜகவிற்கு ஆதரவு பெருகி வருவதாக பேட்டி