கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்; பாஜகவிற்கு ஆதரவு பெருகி வருவதாக பேட்டி
பாஜக வேட்பாளர் அண்ணாமலை, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் திருக்கோவிலில் அண்ணாமலை வழிபாடு செய்தார். பின்னர் கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக அண்ணாமலை வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டிடம் அருகே கூட்டத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காரில் ஆட்சியர் அலுவலகம் வந்த அண்னாமலை வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பாஜகவிற்கு ஆதரவளிப்பார்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பொதுமக்களின் பேராதரவு மற்றும் அன்போடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளராக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு கொடுத்துள்ளோம். பிரதமர் மோடி 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்கிற நம்பிக்கை உள்ளது. அதில் கோயம்புத்தூர் மக்களின் குரலாக பாஜகவின் குரல் இருக்கும் என உறுதியாக நம்புகிறோம். கடந்த 10 நாட்களாக கோயம்புத்தூர் மக்களின் அன்பை ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பார்த்து வருகிறேன். கோயம்புத்தூரின் குரல் பாராளுமன்றத்தில் ஒழிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். கோவையின் வளர்ச்சியை முன்னெடுத்து, பிரச்சனைகளை சரி செய்ய பாஜகவிற்கு ஆதரவளிப்பார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் இருந்து குரல் இல்லை என்றாலும், 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மக்கள் பாஜகவிற்கு சட்டமன்ற உறுப்பினரை அன்பளிப்பாக அளித்தனர். இப்போது ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் மோடிக்கு அன்பளிப்பாக கொடுப்பார்கள் என உறுதியாக நம்புகிறோம். அதிமுக வேட்பாளர் தந்தை குறித்த கருத்துக்கு மன்னிப்பு கூற முடியாது. அது என்னுடைய கருத்து. வேட்பாளரோடு எனக்கு போட்டியில்லை. தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கும் ஆதிக்க சக்தியோடு தான் எங்களது போட்டி. பாஜகவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதை பார்த்த அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்த்து வருகிறது. கோவையின் வளர்ச்சியை கெடுக்கும் ஆதிக்க சக்தியோடு மட்டுமே எங்களது போராட்டம் இருக்கும். கோவையின் ஜவுளித்துறை மற்றும் தொழில் துறையினரின் குரலாக கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எத்தனை முறை பேசியுள்ளார் என்பதை பார்க்க வேண்டும். ஆனால் நாங்கள் கட்சி ரீதியாக கோவையின் ஜவுளித்துறை வளர்ச்சிக்காக முயற்சிகளை முன்னெடுத்து சலுகைகளை பெற்றுத் தந்துள்ளோம்.
கோவை குண்டு வெடிப்பு
குறிப்பாக விமான நிலைய விரிவாக்கம் குறித்து மத்திய அமைச்சர் முதலமைச்சருக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார். கடைசியாக உள்ள 87 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில் தாமதப்படுத்தி வருகின்றனர். சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் மூன்று முறை விமான நிலைய விரிவாக்கம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் முயற்சியில் ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கோயம்புத்தூருக்கு வந்து தொழில்துறையினரின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவை என்பதை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். கோவையின் காவல் தெய்வமாக உள்ள கோனியம்மன் கோவிலில் வழிபாடு செய்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். நான் வெற்றி பெற வேண்டும் என வேண்டவில்லை. மக்கள் நலனுக்காக மட்டுமே கோனியம்மன் கோவிலில் வழிபாடு செய்தேன். 2002 ஆம் ஆண்டு பொறியல் படிப்பிற்காக கோவைக்கு வந்தேன் திருமணம் செய்து இங்கு தான் வசித்து வருகிறேன். தமிழகத்தில் இருந்து பலரும் கோவைக்கு வந்து தங்கியுள்ளனர். அதிமுக வேட்பாளர் சொல்வதை வைத்து பார்த்தால் சூலூர், பல்லடம் திருப்பூரில் வருகிறது. அதிமுக திமுக இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கும் பயம் வந்துவிட்டது என்பதை அவர்களது பேச்சுக்கள் காட்டுகின்றன.
1998 கோவை குண்டுவெடிப்பை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தவர், 2022 ஆம் ஆண்டு கோவையில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு முயற்சியிலிருந்து நாம் தப்பித்தோம். இந்த வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். என்.ஐ.ஏ காவல் நிலையம் கோவையில் வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிறித்தவம் மற்றும் முஸ்லிம் மத குருமார்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறோம். அவர்களின் ஆதரவும் எங்களுக்கு உண்டு. சிறுபான்மையினர் பெரும்பான்மை என்கிற வார்த்தைகளை பயன்படுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அனைவரையும் கோவையின் மக்களாக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.