பஞ்சர் சொல்யூசன்.. இருமல் மருந்து.. ஊரடங்கில் மது கிடைக்காமல் வழிமாறும் மதுக்குடிப்போர்!
ஊரடங்கு உத்தரவால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் திண்டாடும் மதுக்குடிப்போர், எதைக் குடித்தால் போதை ஏறும் என விபரீத யுக்திகளை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் மதுபாட்டில்கள் கிடைக்காமல் அல்லாடும் மதுக்குடிப்போர், எதைக் குடித்தால் போதை ஏறும் என விபரீத யுக்திகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவிலேயே மது குடிப்போர் அதிகம் உள்ள மாநிலமாகி விட்டது தமிழகம். தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை என மது விற்பனை அமோகமாகி, சாமான்யர்களின் சம்பாத்தியத்தில் பெரும் பகுதி டாஸ்மாக் கடைகளின் கஜானாவை நிரப்பி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வீசுகிறது. இதனால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில். ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகளும் மூடுவிழா கண்டுவிட்டன.
கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் மது கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். தினமும் குடித்தே பழக்கப்பட்ட மதுக்குடிப்போர் இப்போது திண்டாட்டத்தில் உள்ளனர். ஊரடங்கால் இப்போது வேலை இல்லாததால் மது எங்கே கிடைக்கும் என வீதி வீதியாக தேடி அலைகின்றனர். இதைப் பயன்படுத்தி மதுபாட்டில்களை பாட்டில்களை ஏற்கனவே வாங்கி பதுக்கி வைத்திருந்த சிலர், தற்போது கள்ளச்சந்தையில் இரு மடங்கு விலை கொடுத்து கடந்த சில நாட்களாக குடித்து வந்தனர். சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து பாட்டில்களை அள்ளிச் சென்ற சம்பவங்களும் அரங்கேறின. இப்போது, அவ்வாறு பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக் மதுபாட்டில்கள் தீர்ந்து போனதால் போதைக்கு மாற்றாக சில விபரீத வழிமுறைகளை சிலர் கையாள ஆரம்பித்துள்ளனர்
போதை மாத்திரை, தூக்க மாத்திரை, இருமலுக்கு பயன்படுத்தும் டானிக் போன்றவற்றை வாங்க ஏராளமானோர் மருந்துக் கடைகளுக்கு படையெடுத்து வருவதால், சமாளிக்க முடியாமல் கடைக்காரர்கள் திண்டாடுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இதனால் சில இடங்களில் கள்ள சந்தையில் 180 மில்லி அளவு கொண்ட125 ரூபாய் மது பாட்டிலை 600 ரூபாய் வரை வாங்கி குடித்து வந்த மதுப்பிரியர்கள் பின்னர் மது பாட்டில் விலை சற்று கூடுதலாக 800 வரை விலை போகிறது என தெரியவந்ததை அடுத்து வாங்கி குடிக்க பணம் இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று சில இருமல் மருந்தை 100 ரூபாய் விலை நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 பாட்டில் வரை வாங்கி குடித்து வருகின்றனர். இதனால் மருந்து கடையில் கூட்டம். வேறு சில குடிமகன்களோ சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் சொல்யூசன் திரவத்தை தீயில் எரித்து அதன் புகையை முகர்ந்து போதையேற்றும் விபரீதங்களும் அரங்கேறி வருகின்றன. ஒரு பக்கம் தமிழகத்தில் 20 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த கள்ளச்சாராயமும் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதும் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
மேலும் புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு கள்ள விற்பனைக்கு எடுத்து வரும் போலி மதுபாட்டில்கள், எரிசாராயம் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க மலை பகுதி, கரும்பு, வாழை ஆகிய தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். இந்த சூழலில் கலப்படம் செய்யப்பட்ட மது மற்றும் சாராயம் போன்றவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர், மேலும் இந்நிலையில் கஞ்சா விற்பனையில் சற்று தலைதூக்கியுள்ளது, கள்ளத்தனமாக கஞ்சா, எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்களை களையெடுக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். போதைக்காக ஆசைப்பட்டு கண்டதையும் குடித்து உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.