திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானத்தில் மதுபானம் அருந்தலாம்; ஆனால் ஒரு கண்டிஷன்: தமிழக அரசு
திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.
திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற்று, மது விளக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விளையாட்டு மைதானங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்ட அரசிதழில் F.L.12 என்ற லைசென்ஸ்க்கான கட்டணமும் இடம்பெற்றுள்ளது. இதற்கான கட்டணங்கள் எவ்வளவு என்பது குறித்தும் அந்த அறிவிப்பில் வெளியாகியுள்ளது. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் திருமண மண்டபம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும், அதேபோல் ஒரு நாள் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற ரூபாய் 11 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று தமிழக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள்:
1. உரிமம் பெற்றவர், மாநகராட்சி எல்லைக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காகவும், மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு காவல் கண்காணிப்பாளரிடமிருந்தும் தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும்.
2. உரிமம் பெற்றவர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் லிமிடெட் மொத்த விற்பனைக் கிடங்கில் இருந்து அல்லது துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) நியமிக்கும் அல்லது ஒப்புதல் அளிக்கக்கூடிய பிற இடங்களில் இருந்து பொருட்களைப் பெற வேண்டும். துணை ஆணையர் / உதவி ஆணையரால் (கலால்) அங்கீகரிக்கப்பட்ட பொருட்களின் அளவின்படி பெற்றுக்கொள்ள வேண்டும்.
3. மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறவும் சிறப்பு உரிமம் வழங்குவதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நிகழ்ச்சி நடத்தப்படவுள்ள நாளிலிருந்து ஏழு வேலை நாட்களுக்கு முன்னதாக மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) படிவத்தில் F.A.1.14 பூர்த்தி செய்து அனுப்பியிருக்க வேண்டும்.
4. விண்ணப்பத்துடன் அரசு கருவூலம் அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் அசல் சலான் நகலின் ரிமிட்டர் நகலுடன், உரிமக் கட்டணத்தை செலுத்திய ரசீதை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
5. அத்தகைய விண்ணப்பத்தைப் பெற்றவுடன், மாவட்டத்தில் உள்ள துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) அதனை சரிபார்த்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பிறகு, மாவட்டத்தின் முன் அனுமதியுடன் F.L.12 படிவத்தில் சிறப்பு உரிமம் வழங்கப்படும்.
6. சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) F.T.P படிவத்தில் போக்குவரத்து அனுமதியைப் பெற்ற பிறகு உரிமம் பெற்றவர் மதுபானத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.