Life of Director KV Anand | ‛ஒரு ட்ரெக்கிங்கில் தொடங்கிய கேமரா சகாப்தம்…!’ – கே.வி.ஆனந்த் நினைவுக் குறிப்புகள்
கே.வி. ஆனந்த் திரைப்படங்கள் என்றாலே அதில் மூன்று முக்கிய அம்சங்களை எதிர்ப்பார்க்கலாம். அவரது படங்களின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் இருப்பார், ஆண்டனி அவருக்கான எடிட்டர் மற்றும் நாவலாசிரியர்களான சுரேஷ் பாலா அவருக்கான எழுத்தாளர்கள்.
இது தமிழ்த் திரைப்பட உலகில் திடீர் மரணங்களின் காலமாக இருக்கிறது. நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்ததையே இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் கோலிவுட்டில் தற்போது மேலும் ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது. கனாக் கண்டேன், கோ, அயன், மாற்றான், காப்பான் உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த தீடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருக்கிறார்.
கே.வி.ஆனந்தின் வாழ்க்கை அவரது ஒளிப்பதிவுகள் போல ஒவ்வொன்றாகச் செதுக்கப்பட்டது எனலாம். நண்பர்களுடனான ட்ரெக்கிங்கில் தொடங்கிய அவரது புகைப்படக் காதல், பத்திரிகைத்துறையில் அவரைப் புகைப்படக் கலைஞனாகக் கொண்டுவந்து சேர்த்தது. தீராக்காதல் அடங்காத பசியைப் போன்றது என்பார்கள். கேமிராவின் மீதான அந்தப் புகைப்படக்கலைஞனின் தீராக்காதல்தான் பின்னர் அவரைச் சினிமா ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் ஆக்கியது.
சினிமாப்பாடல் காட்சிகளே பிடிக்காது, ஃபேக்ட்கள் இல்லாமல் சினிமா எடுக்கமுடியாது என ஆழமான கருத்துகொண்ட கே.வி.ஆனந்த இயக்குநரான கதை சுவாரசியமானது. அவர் எடுத்தப் படங்கள் முழுக்க அவரது வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
உதாரணத்துக்கு கனாக் கண்டேன் படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பில் அவர் அளித்த முதல் சூப்பர்ஹிட் படமான ’அயன்’ அவரது 20களில் அவர் எதிர்கொண்ட அனுபங்களின் அடிப்படையில் உருவானது. சிங்கப்பூரில் தான் வாங்கிய கண் கண்ணாடி ஒன்றுக்காக சென்னை விமான நிலையத்தில் பல மணிநேரம் க்ளியரன்சுக்காகக் காத்திருந்தவருக்குத்தான் கடத்தல் பொருட்கள் பற்றிய ஐடியா நெருப்புப்பொறிபோலத் தட்டியிருக்கிறது. உடனடியாக அதுகுறித்த ஆய்வுகளில் இறங்கினார். சுங்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். இன்னும் சொல்லப்போனால் சென்னையின் அறியப்படாத பல போதைப்பொருள் விநியோகிக்கும் பப்களுக்குச் சென்றெல்லாம் ஆய்வுகள் செய்தார். இப்படித்தான் 2009ல் அவரது அயன் பிறந்தான். அவரது இரட்டையர் படமான மாற்றான் ஸ்பெயினில் உருவான ஐடியா.
அப்போது இயக்குநர் ஷங்கரின் சிவாஜி திரைப்படத்துக்காகக் கேமிராமேனாகப் பணியாற்றி வந்த ஆனந்த் பாடல் காட்சிகள் முடித்துவிட்டு விமானத்தில் பயணம்செய்துகொண்டிருந்தார். பயண நேரத்தில் நேஷனல் ஜியாகரபிக்கின் தாய்லாந்து சியாமிஸ் இரட்டையர்கள் குறித்த ஆவணப்படத்தைப் பார்த்தவர் , அதனால் ஈர்க்கப்பட்டு மாற்றானை உருவாக்கினார். இதற்காகச் சென்னையின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் மற்றும் அவரது மகன் இருவரையும் நேரடியாகச் சந்தித்து ஆய்வுகள் மேற்கொண்டார். மாற்றான் திரைப்படத்தில் வரும் இதய அறுவை சிகிச்சை தொடர்பான காட்சியை ஆனந்தால் தத்ரூபமாக இயக்க முடிந்ததற்கான காரணம் அதுதான்.
கேமிராவுக்கு அடுத்தது ஆனந்துக்கு மிகவும் பிடித்தது எழுத்து. அவருக்குத் துப்பறியும் நாவல்கள் படிப்பது பிடிக்கும். தமிழில் பிடித்த எழுத்தாளர்கள் தி.ஜானகிராமனும் சுஜாதாவும். பிடித்த புத்தகம் ஆங்கிலத்தில் எழுத்தாளர் அலெக்ஸ் ஹெய்லி எழுதிய ’தி ரூட்ஸ்’
கே.வி. ஆனந்த் திரைப்படங்கள் என்றாலே அதில் மூன்று முக்கிய அம்சங்களை எதிர்ப்பார்க்கலாம். அவரது படங்களின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் இருப்பார், ஆண்டனி அவருக்கான எடிட்டர் மற்றும் நாவலாசிரியர்களான சுரேஷ் பாலா அவருக்கான எழுத்தாளர்கள்.
தமிழ்த்திரையுலகின் அசைக்கமுடியாத காம்போ கௌதம் வாசுதேவ் -ஹாரிஸ் ஜெயராஜ் என்கிற நிலையை ஆனந்த்- ஹாரிஸ் ஜெயராஜ் என மாற்றியவர். ஆண்டனி எடிட்டர் என்பதையும் கடந்து ஆனந்தின் நெருங்கிய நண்பர், தீவிர விமர்சகர். ’மாற்றான் திரைப்படத்தைப் பத்து நிமிடங்கள் குறைக்கவேண்டும் என நான் சொன்னபோது அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என என்னிடம் கடுமையாகக் கோபம் கொண்டவர் ஆண்டனி’ என்று அந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டிருந்தார் ஆனந்த். இந்தியா டுடே இதழில் ஆனந்த் புகைப்படக்கலைஞராகப் பணியாற்றிய காலந்தொட்டே அவருக்கு நாவலாசிரியர்கள் சுபா பழக்கம்.
கேமிராவுக்கு அடுத்தது ஆனந்துக்கு மிகவும் பிடித்தது எழுத்து. அவருக்குத் துப்பறியும் நாவல்கள் படிப்பது பிடிக்கும்.தமிழில் பிடித்த எழுத்தாளர்கள் தி.ஜானகிராமனும் சுஜாதாவும். பிடித்த புத்தகம் ஆங்கிலத்தில் எழுத்தாளர் அலெக்ஸ் ஹெய்லி எழுதிய ’தி ரூட்ஸ்’ தனது திரைப்படங்களுக்கான ஸ்க்ரிப்ட்கள் மட்டும் ஐந்து முதல் ஆறு பிரதிகள் அவரிடம் இருக்கும். அவரது சுருக்கமான ஒற்றை வார்த்தைத் திரைப்பட டைட்டில்கள் அத்தனையும் இப்படி ஸ்க்ரிப்டுகள் எழுதும்போது உருவானவைதான்.
சினிமாவில் பாடல்காட்சிகள் என்றாலே அறவே பிடிக்காத ஆனந்துக்கு கோ திரைப்படத்தில் வைக்கப்பட்ட பிரமாண்டப் பாடல்காட்சிகள் தவிர்க்க முடியாததாக இருந்தது. ‘எனக்குப் பாடல்காட்சிகளே பிடிக்காது. அந்த 30 நிமிடத்தை நான் பயனுள்ளதாக வேறு எதற்காவதுச் செலவிடுவேன்.கதையை உருவாக்குவதற்கு நான் எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட வெளிநாடுகளில் நான் எடுக்கும் பாடல் காட்சிகளுக்கான நேரம் குறைவு’ என்பார். ஆனந்த் அடிப்படையில் பத்திரிகைப் புகைப்படக்காரர் என்பதால் அவரது ’கோ’ திரைப்படம் அவரது சொந்த அனுபத்தையும் கதையாகக் கொண்டிருந்தது. படத்தில் வரும் வங்கிக்கொள்ளைக் காட்சி மதுரையில் அவருக்கு நேர்ந்த அனுபவத்தில் உருவானது.
தன்னை இயக்குநர் எனச் சொல்லிக் கொள்வதைவிட ஒளிப்பதிவாளர் எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்பார். பி.சி.ஸ்ரீராமின் பட்டறையில் ஒளிப்பதிவைக் கற்றவர். மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கிய ’தென்மாவின் கொம்பத்து’ ஒளிப்பதிவாளராக அவரது முதல் திரைப்படம். பிரியதர்ஷன் தனது படத்துக்கு முதலில் ஒளிப்பதிவாளராகத் தேர்ந்தெடுத்தது சந்தோஷ் சிவன் அல்லது ஜீவாவைத்தான் ஆனால் அவர்கள் இருவருமே அப்போது வேறொரு படத்தில் ஒப்பந்தமாகியிருந்ததால் பி.சி.ஸ்ரீராமே இயக்குநர் பிரியதர்ஷனுக்கு ஆனந்தைப் பரிந்துரைத்தார்.
தமிழில் அவரது முதல் திரைப்படமான காதல் தேசம் அதிகாலை மேக மூட்டங்களும் இளைஞர் கூட்டங்களுக்குமிடையே ஒரு அழகான சென்னையை மக்களுக்குப் படம்பிடித்துக் காண்பித்தது.
முதல்படமே அவருக்குச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் கேமிரா ரேம்ப்பிங் என்னும் தொழில்நுட்பத்தை முதன்முதலாக ஆனந்த் அறிமுகப்படுத்தினார். டிஜிட்டல் புகைப்படக்கலையில் அவ்வளவு நாட்டமில்லாத ஆனந்துக்கு அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் அன்செல் ஆடம்ஸ் மிகவும் பிடித்த நபர். ’நமது படைப்பைப் பலரிடம் கொண்டு சேர்க்கிறோம். அதில் வண்ணங்களைத் திருத்தவேண்டியிருக்கும். ஷூட்டிங்குக்குப் பிறகான பல வேலைகள் அதில் இருக்கும். அந்தச் சூழலில் உயர்ரகக் கேமிராவில் நாம் எதிர்பார்க்கும் தரத்தைத் தர இயலாது. ஒரு லட்சம் முதல் ஒருகோடி மதிப்பிலான கேமிராக்கள் கொண்டு தமிழ்த்திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் தமிழ் மக்கள் எத்தனை பேருக்கு அந்தக் கேமிரா பற்றித் தெரியும். மாறாக நல்ல ஒளிப்பதிவு என்பது கேமிராவைச் சார்ந்ததாக இல்லாமல் கதையோடு ஒன்றியதாக இருக்கவேண்டும்’ என்பார் ஆனந்த்.
அவரது அயன் திரைப்படத்தில் மறைந்த நா.முத்துக்குமார் எழுதிய வரிகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.
‘கனவுக்குச் செயல்கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்’
தனது கனவுகளை விடாமல் விரட்டிப்பிடித்து சூரியனில் செடி முளைப்பது சாத்தியம் என நிரூபித்தக் கலைஞனுக்கு அஞ்சலி!