’கடிதத்த கையெழுத்து போட்டு வாங்கிட்டு தெரியாதுன்னு எப்படி சொல்லலாம்?’ - கொதித்தெழும் பன்னீர் தரப்பு
பல மூத்த கட்சித்தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஓபிஎஸ் விடுவதாக இல்லை. விட்டுக்கொடுத்தது எல்லாம் போதும் என்ற முடிவில் இருக்கிறார். அவ்வாறு நீதிமன்றத்தை ஓபிஎஸ் நாடினால் சந்திக்கத் தயார்” - இபிஎஸ் தரப்பு
பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை கையெழுத்திட்டு வாங்கி விட்டு தெரியாதுன்னு சொல்லலாம் என பன்னீர்செல்வம் தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒற்றைத் தலைமை பிரச்னை
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே தர்ம யுத்தமே நடந்து கொண்டு இருக்கிறது. 'நீயா நானா' போட்டியில் ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் போட்டா போட்டி போட்டு வருகின்றனர். சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என ஓபிஎஸ் சொன்னாலும் ஒற்றை தலைமை பிரச்சினையை எடப்பாடி தூண்டிவிடுவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் நாளை மறுநாள் (ஜூன்.22) நடக்கும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமிக்கே அதிக ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ஒற்றைத் தலைமையை கொண்டு வந்தால் நீதிமன்றத்தை நாடவும் ஓபிஎஸ் தயாராக இருப்பதாக தெரிகிறது.
நீதிமன்றம் செல்ல ஓபிஎஸ் முடிவு?
இந்நிலையில், “பல மூத்த கட்சித்தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஓபிஎஸ் விடுவதாக இல்லை. விட்டுக்கொடுத்தது எல்லாம் போதும் என்ற முடிவில் இருக்கிறார். அவ்வாறு நீதிமன்றத்தை ஓபிஎஸ் நாடினால் சந்திக்கத் தயார்” என இபிஎஸ்சும் பதிலடி கொடுத்ததாகத் தெரிகிறது.
இவ்வாறு வாக்குவாதம் சூடுபிடித்துள்ள நிலையில் தான் ஓபிஎஸ் இபிஎஸ்சுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் பொதுக்குழுவைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பேசுகையில், ”பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும். ஓபிஎஸ் கலந்துகொள்வார். ஓபிஎஸ் எடப்பாடிக்கு கடிதம் அனுப்பியதாகக் கூறுகிறீர்கள்.
நானும் ஒரு துணை ஒருங்கிணைப்பாளர், அதோடு பொதுக்குழு உறுப்பினர். ஆனால், இதுவரை அந்தக் கடிதம் எனக்கு வரவில்லை. எடப்பாடி அந்தக் கடிதத்தைப் பற்றி எங்களிடம் கூறவில்லை. வந்திருந்தால் கூறியிருப்பார். அந்தக் கடிதத்தின் சாராம்சம் என்னவென்று எனக்குத் தெரியாது” என்றார்.
இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் பன்னீர் தரப்பு ஆதரவாளருமான வைத்தியலிங்கம் கூறுகையில், “ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை தலைமை அலுவலக நிர்வாகி மகாலிங்கம் கையெழுத்திட்டு வாங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் கடிதம் செல்லவில்லை எனச் சொல்கிறார்கள். இபிஎஸ் தரப்பினர் நீதிமன்றம் சென்றுள்ளனர். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.
அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது
#அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் அது முடியாது நான் முன்னின்று காத்து நிற்பேன் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உற்சாகபடுத்திய மக்கள் முதல்வர் அண்ணன் #எடப்பாடியார் @EPSTamilNadu அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 @AIADMKOfficial @satyenaiadmk pic.twitter.com/sHJczFGOmp
— JSK@Jananii Sathishkumar (@JananiiSathish) June 20, 2022
முன்னதாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், ”அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் அது முடியாது, நான் முன்னின்று காத்து நிற்பேன்” என்று தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி எடப்பாடி பழனிசாமி உற்சாகபடுத்தியதாக கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.