Ilangumaranar: தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்ததில் புலவர் இளங்குமரனாரின் பங்களிப்பு என்ன?
சமஸ்கிருந்த மந்திரங்களை முற்றிலும் தவிர்த்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை திருக்குறள் ஓதியும் தமிழில் வாழ்த்தியும் நடத்தி வைத்தவர் இளங்குமரனார் என ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்
தமிழின் அனைத்து இலக்கிய மற்றும் இலக்கண நூல்களை தொகுத்து 17 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை வெறும் 8 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்துடன், அந்நூல்களை பள்ளி, கல்லூரி, நூலங்கங்களுக்கு விலையில்லாமல் வழங்கி தமிழுக்கு அருந்தொண்டாற்றிய இரா.இளங்குமரனார் தனது 91ஆவது அகவையில் மதுரையில் நேற்று காலமானார். திருநெல்வேலி மாவட்டம் வாஅழவந்தாள்புரம் கிராமத்தில் 1930ஆம் ஆண்டு பிறந்தவர் இரா.இளங்குமரனார். குடும்பத்தில் எட்டாவது குழந்தையாக பிறந்ததன் காரணமாக இவருக்கு பெற்றோர் கிருஷ்ணன் என பெயர் வைத்தனர்.
இளம் வயதில் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட தனித்தமிழ்இயக்க ஈடுபாடும் தமிழறிஞர்கள் மறைமலையடிகளார், ஞா.தேவநேயப்பாவாணர் ஆகியோரின் நூல்தொடர்பும் இவரைப் புலவர் இரா.இளங்குமரனார் ஆக்கின. தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தாம் பிறந்த நெல்லை மாவட்ட வாழவந்தாள்புரத்தில்பணியைத் தொடங்கிய இளங்குமரனார், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் நான்காண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
தனது பணி ஓய்விற்குப்பின் திருச்சிராப்பள்ளி காவிரியாற்றங்கரையில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துத் தமிழ்நெறி வாழ்வியல்பணிகளை ஒருங்கிணைத்தார். இவர் நூல்கள் அனைத்தையும் சென்னைத் தமிழ்மண் பதிப்பகம் பொருள்வாரித் தொகுப்புகளாக வெளியிட்டு, வாழ்ந்த காலத்திலேயே இவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. அறிஞர் சி.இலக்குவனாரோடு இணைந்து தமிழ்வளர்ச்சி பணியில் தம்மை ஈடுபட்டுத்திக் கொண்ட இளங்குமரனார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தில் சிறப்புத்தொகுப்பாளராக இவரை இணைத்துக் கொண்டவர் மொழிப்பேரறிஞர் பாவாணர்.
பாவாணர் வரலாறு , பாவாணர் மடல்கள் (இருதொகுதி) , பாவாணர் வேர்ச்சொல்லாய்வுத் தொகுப்பான 'தேவநேயம்' (14தொகுதி) , தமிழ்ச் சொற்களுக்குப் பொருட்காரணம் தரும் அருமுயற்சிப் பெருந்தொகுப்பு 'செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம்' (பத்துத்தொகுதி) என 500க்கும் அதிகமான தனித்தன்மையான நூல்வரிசைகளை இரா.இளங்குமரனார் வழங்கி உள்ளார்.
அழிந்துபோன நூல்களாகக் கருதப்பட்ட 'காக்கைப்பாடினியம்', 'தமிழக ஒழுகு' முதலிய பலநூல்கள் இவர் பதிப்பால் உயிர்பெற்றுள்ளன. சுவடிகள் அச்சேறிய வரலாற்றை விளக்கும் இவரின் 'சுவடிக்கலை' எனும் பலரின் வரவேற்பை பெற்றதுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முதுமுனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. எலும்புமுறிவாலும் நெஞ்சகச் சிக்கலாலும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று அண்மையில் மதுரை திரும்பிய நிலையில் திருநகர் இராமன்தெரு இல்லத்தில் நேற்றிரவு 7.30க்கு காலமானார்.
புலவர் இரா. இளங்குமரனாரின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தமிழையே உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்த முதுபெறும் அறிஞரான அய்யா இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், வடமொழி-பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைப் பாதுக்காகும் முனைப்புடன், சமஸ்கிருந்த மந்திரங்களை முற்றிலும் தவிர்த்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை திருக்குறள் ஓதியும் தமிழில் வாழ்த்தியும் நடத்தி வைத்தவர் இளங்குமரனார் என ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
வாழ்நாள் முழுமையும் அலைந்து திரிந்து, நூல்களைத் தேடிப்பிடித்து அச்சிட்டுத் தமிழுக்கு ஆக்கம் செய்தவர் இளங்குமரனார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.