64 ஆண்டுகளுக்குப் பிறகு மெரீனாவில் புது இடத்திற்கு மாறுகிறதா மகாத்மா காந்தி சிலை? - சிறப்பு ரிப்போர்ட்
துல்லியமாக வயதைக் கணிக்க முடியாத அகண்டு விரிந்து மெரீனா கடற்கரையின் வரலாற்றில் ஓர் அங்கமான மகாத்மா காந்தி சிலை, சில ஆண்டுகளுக்கு இடம்மாறும் என தகவல்
மெரீனா கடற்கரை என்றாலே, உயர்ந்து நிற்கும் காந்தி சிலை, அனைவரின் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு நடப்பது போன்றே தத்ரூபமாக இருக்கும் மகாத்மாவின் கம்பீரத் தோற்றம், அனைவரையும் கவர்ந்திழுக்கும். கிட்டத்தட்ட தமிழகத்தில் ஆங்கிலப்புத்தாண்டு அங்குதான் பிறக்கிறதோ என்பதுபோல், புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் அங்குதான் கூட்டம் அலைமோதும்.
தமிழகத்திற்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான தொடர்பு என்பது மிக மிக அதிகம். பல நினைவலைகளை வரலாறு புத்தகங்களில் நாம் படிந்திருந்தாலும், மிக முக்கியமாக, கோட்டும் சூட்டுமாக இருந்த மகாத்மா காந்தியின் ஆடை மாற்றத்திற்கு வித்திட்டதே, தமிழகத்தில் மதுரைக்கு வந்தபோதுதான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ஏன் இந்த வரலாறு என்றால், அந்தளவுக்கு மகாத்மா காந்தியும் தமிழகமும் எப்போதும் பின்னிப் பிணைந்தே வரலாற்றில் பதிவாகியுள்ளது என்றால் மிகையில்லை.
அப்படிப்பட்ட மகாத்மாவுக்கு, கடந்த 1959-ம் ஆண்டு, அப்போது 50 ஆயிரம் ரூபாய் செலவில், சென்னையில் உள்ள உலகப்புகழ்ப் பெற்ற அகண்ட மெரீனா கடற்கரையில் , 12 அடி உயரத்தில் சிலை வைக்கப்பட்டது. புகழ்ப்பெற்ற சிலை வடிவமைப்பாளர் ராய் சவுத்ரியின் கைவண்ணத்தில், இந்த சிலை அமைக்கப்பட்டது. அன்றைய முதலமைச்சர் காமராஜர் முன்னிலையில், அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்தச் சிலையை திறந்து வைத்தார்.
பல ஆண்டுகளாக, இந்த சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில்தான், குடியரசுத்தின விழாவன்று, தேசிய கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை தமிழகத்தின் ஆளுநர் ஏற்றுக் கொள்வார். அதேபோல், அக்டோபர் 2-ம் தேதி, காந்தி பிறந்த நாளன்று, இந்த இடமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
அகண்டு விரிந்த மெரீனாவின் ஒரு பக்கத்தில் காந்தியின் சிலையும் மற்றொரு பக்கத்தில், உழைப்பாளர் சிலை அருகே உள்ள அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா சமாதிகளும் கிட்டத்தட்ட எல்லைப்பகுதிகள் என்றே சொல்லலாம். அதுவும் காந்தி சிலைக்கு எதிரே, ஒருபக்கம் ராணி மேரிக் கல்லூரியும் மற்றொரு பக்கம் தமிழக காவல்துறையின் தலைமையகமும் இருக்கின்றன.
கிட்டத்தட்ட 64 ஆண்டுகளாக, புயல், மழை, ஏன் சுனாமி கூட வந்துச் சென்றாலும், கம்பீரத்தில் எந்தக்குறையுமின்றி, அதே இடத்தில் வீற்றிருந்து, இன்றும் மெரீனாவுக்கு வருவோரையெல்லாம் சிலை வடிவில் வரவேற்றுக் கொண்டுதான் இருக்கிறார் மகாத்மா காந்தி. அத்தகைய காந்திதான், இன்னும் சில தினங்களில் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு போகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகளின் ஓர் அங்கமாக, காந்தி சிலை நின்றிருந்த இடத்திற்குக் கீழே, கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைய இருப்பதால், அந்த இடத்தில் இருந்து காந்தி சிலையை வேறு இடத்திற்கு அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக, இன்று போகிறார், நாளை போகிறார் எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதம், பல்வேறு துறைகளின் ஆலோசனைகளுக்குப் பிறகு, காந்தி சிலையை தற்காலிகமாக இடம் மாற்றி வைப்பதற்கு தமிழக அரசு அனுமதி தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மெரீனாவிற்கு அழகு சேர்க்கும் காந்தி சிலையை, வேறு இடத்திற்கு மாற்றாமல், தற்போதுள்ள இடத்தில் இருந்து, 15 முதல் 20 மீட்டர் தொலைவில், மெரீனாவிலேயே வேறொரு இடத்தில் காந்தி சிலை வைக்கப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மெட்ரோ பணிகள் முடிவடைந்தப் பிறகு, தற்போது இருந்த அதே இடத்தில் மீண்டும் காந்தி சிலை வைக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் சார்பில் தகவல்கள் பரவியுள்ளது. அதிகாரப்பூர்வமாக எப்போது காந்தி சிலை இடம்பெயர்கிறது, மீண்டும் எப்போது வைக்கப்படும் என்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், மெட்ரோ நிர்வாகத்துடனான நம்முடைய விசாரிப்பின்போது இன்னும் சில தினங்களில் வேறு இடத்திற்கு மாற்றும் பணி நடைபெறும் என்று கூறப்பட்டது.
ஆனால், அங்கே தற்போது நடைபெறும் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் பேசியபோது, இடத்தை மாற்றாமலேயே, ரயில் நிலைய அமைப்புப் பணிகள் நடைபெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறுகின்றனர். கட்டடப்பணிகளின் போது, காந்தி சிலைபாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஏதுவாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், நமக்கு கிடைத்த உறுதியான தகவலின்படி, விரைவில் காந்தி சிலை, அருகிலேயே உள்ள வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று அதிகாரிகள் மட்டத்தில் கூறுகின்றனர்.
தற்போதைய காந்தி சிலைக்கு கீழே அமைக்கப்படும் கலங்கரைவிளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி, பூந்தமல்லி வரை 26.1 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. இந்தப் பாதையில், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், நந்தனம், தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட 23 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கான பணிகளுக்காக, தற்போது அப்பகுதியில் இரவு பகலாக பணிகள் நடைபெறுகின்றன. காந்தி சிலை அருகே யாரும் செல்லமுடியாத அளவுக்கு தடுப்புகள் போடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, மெட்ரோ பணிகள் காரணமாக, இந்தாண்டு குடியரசு தின விழாக் கூட காந்தி சிலை அருகே நடைபெறாமல், மெரீனாவின் மற்றொரு எல்லையான உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
எனவே, துல்லியமாக கணக்கிட முடியாத வயதைக் கொண்ட மெரீனா கடற்கரை வரலாற்றின் ஓர் அங்கமான, மகாத்மா காந்தியின் சிலை, கொஞ்சம் காலத்திற்கு தன்னுடைய நிரந்தர இடத்திலிருந்து இடம்பெயர வாய்ப்பு உள்ளது. மீண்டும் சில ஆண்டுகளில் அதே இடத்திற்கு வந்துவிடும் என்றாலும், காந்தி சிலை இடம் மாறினால், பலரை பெருமூச்சு விடச்செய்யும் என்றால் தவறில்லை.