சிங்கப்பூரில் இருந்து நாம் தமிழர் கட்சி இளைஞர் வெளியேற்றம் - உண்மை காரணம் என்ன?
’’குமரேசனிடம் பிரபாகரனின் புகைப்படம் இருந்ததையடுத்து நீ ஒரு தீவிரவாதியா, தமிழர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட நினைக்கிறாயா என தனது மகனுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்’’
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் இவர் கடந்த 3 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் குமரேசன் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இந்தியாவை சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அதிலும் சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள்.
தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழர்களின் முதல் தேர்வாக இருக்கும் வெளிநாடு சிங்கப்பூர் அல்லது மலேசியாதான். தமிழர்கள் பலர் சிங்கப்பூரில் அமைச்சர்களாக உள்ளனர். கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சிங்கப்பூர்-தமிழ்நாடு நெருங்கிய தொடர்புடையது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது. இவருக்கு வாழ்நாள் தடை விதித்து இந்தியாவிற்கு நாடு கடத்தியது சிங்கப்பூர் அரசு. இனி அவர் சிங்கப்பூர் செல்ல முடியாது. பொதுவாக சிங்கப்பூர் அரசு தமிழர்களுக்கு எதிராக இப்படி நடவடிக்கை எடுக்காது. தமிழர்களை இருகரம் கூப்பி வரவேற்கும் நாடுதான் சிங்கப்பூர். ஆனால் திருவாரூரைச் சேர்ந்த குமரேசன் இப்போது வாழ்நாள் தடை பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் கடந்த சில காலமாகவே முடக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. அங்கு நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்று வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து பிரச்சாரங்களை செய்வதால் நாம் தமிழருக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து குமரேசனின் தந்தை ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் பேசிய பொழுது, எனது மகன் குமரேசன் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிங்கப்பூர் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக உள்ளார். அதே நேரத்தில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் பணியில் இருந்த பொழுது சீன நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் குமரேசனுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது அதனை அடுத்து குமரேசன் வேலை பார்த்த நிர்வாகம் குமரேசனிடம் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் இருந்ததையடுத்து நீ ஒரு தீவிரவாதியா, தமிழர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட நினைக்கிறாயா என தனது மகனுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். அதனை அடுத்து அவரது வங்கி கணக்குகளை முடக்கி அவரை சிங்கப்பூர் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வெளியேற்றி உள்ளனர் என அவரது தந்தை வேதனையுடன் தெரிவித்தார். அதனையடுத்து சொந்த ஊருக்கு வந்த குமரேசனிடம் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும்பொழுது சிங்கப்பூர் நாட்டில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் அதிக அளவில் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் சிங்கப்பூர் நாட்டில் இதுவரை 400 நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தொடர்ந்து நான் பேசி வருகிறேன் தற்பொழுது குமரேசன் சிங்கப்பூர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.