மேலும் அறிய
Advertisement
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம் : வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?
உடன்குடி சமூக ஆர்வலரான குணசீலன்வேலன் கூறும்போது, தற்போது நிலம் கையகப்படுத்தும் இடத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது என்றார்
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது. ராக்கெட் ஏவுவதற்கு ஏற்ற இடம் நிலநடுக்கோடு பகுதி ஆகும். இந்த பகுதியில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதால், ராக்கெட்டின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செயற்கை கோள்களை ஏவ முடியும். இதனால் அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்த முடியும். ஸ்ரீஹரிகோட்டா நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்து உள்ளது. தொலையுணர்வு செயற்கைகோள்களை தெற்கு நோக்கியும், தொலைதொடர்பு செயற்கை கோள்கள் கிழக்கு நோக்கியும் ஏவப்படுகின்றன. இங்கு இருந்து ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளும் 104 டிகிரி கோணத்தில் ஏவப்படுகிறது.
ஆனால் கிழக்கு திசையில் 90 டிகிரி கோணத்தில் ஏவுவதே சிறந்தது.
குலசேகரன்பட்டினம்
இதனால் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாக இருக்க வேண்டும்.
நிலையான காலநிலை:
நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் நிலவியல் ரீதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டு உள்ளது. இங்கு இருந்து தெற்கு நோக்கிய ராக்கெட் ஏவுதல்கள் சிறப்பானது. குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே அமைந்து உள்ளது.குலசேகரன் பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும். அதே போன்று கிழக்கு நோக்கிய ஏவுதல்களுக்கு சுமார் 120 டிகிரி கோணத்தில் ஏவ வேண்டும். இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுவதை விட சற்று அதிகம். ஆனால் இதனால் ஏற்படும் இழப்பை புவியீர்ப்பு சுற்று வேக அதிகரிப்பால் ஏற்படும் விசையை கொண்டு ஈடுகட்ட முடியும் என்று கருதப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து முதலில் பிரியும் பாகம் வங்காள விரிகுடாவிலும், 2வது பாகம் இந்திய பெருங்கடலிலும் விழும். இதனால் குறைந்த செலவில் ராக்கெட் ஏவுதல்களை மேற்கொள்ள முடியும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டிணம் சுற்றுவட்டாரத்தில் 2233 ஏக்கர் இதைத் தொடர்ந்து இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக தமிழக அரசிடம் இருந்து நிலத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதன்படி குலசேகரன்பட்டினம் அருகே 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது. குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்படுகிறது. திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலம் தவிர, மீதம் உள்ள பட்டாநிலங்கள் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை 8 பகுதியாக பிரித்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 8 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஒவ்வொரு தாசில்தார் தலைமையிலும் 13 பேர்அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர். இதற்காக திருச்செந்தூரில் சிறப்பு அலுவலகமும் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்தபணிகளை கண்காணிப்பதற்காக ஒரு வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரியும் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து உடன்குடி சமூக ஆர்வலரான குணசீலன்வேலன் கூறும்போது, ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கூடாது என்பதல்ல எங்களது நிலைபாடு, தற்போது நிலம் கையகப்படுத்தும் இடத்தில் சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதாகவும் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் அருகிலேயே மாற்று இடத்தை தேர்வு செய்யலாம் என்கிறார்.
குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், முழுமையாக நிலம் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion