Khelo India Youth Games 2023: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார்.
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட் டோர்) விளையாட்டு போட்டி கடந்த 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த பிரமாண்ட போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் கைப்பந்து, பேட்மிண்டன், சைக்கிளிங், தடகளம், கபடி, வில்வித்தை, நீச்சல், யோகாசனம், கூடைப்பந்து, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ் உள்பட 26 வகையான போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். சென்னையை தவிர்த்து இந்த போட்டியானது கோவை, மதுரை, திருச்சியிலும் நடத்தப்பட்டது.
முதல் நாளில் இருந்தே கேலோ இந்தியாவில் பதக்க வேட்டை நடத்திய தமிழ்நாடு அணி, கடைசி நாளான நேற்றும் முத்திரை பதித்தது.
தமிழ்நாடு 98 பதக்கம்:
13 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியானது நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. நடப்பு சாம்பியனான மஹாராஷ்டிரா 57 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 158 பதக்கங்களுடன் முதலிடத்தை தக்க வைத்தது. இதன்மூலம், தொடர்ந்து 4வது முறையாக மகாராஷ்டிரா முதல் இடத்தை பிடித்தது.
போட்டியை நடத்திய தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என மொதக்கம் 98 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 2 வது இடத்தை பிடித்தது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழ்நாடு அணியின் மிகச்சிறந்த செயல்பாடு இதுதான். இதற்கு முன்பு கடந்த 2019ம் ஆண்டு புனேயில் நடந்த 15 போட்டியில் 27 தங்கம், 36 வெள்ளி, 25 வெண்கலம் என 88 பதக்கத்துடன் 5-வது இடத்தை பெற்றதே தமிழகத்தின் சிறந்த பதக்க எண்ணிக்கையாக இருந்தது. அச்சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பதக்க பட்டியல் விவரம்:
- தடகளம் - 11 தங்கம் உள்பட 18 பதக்கம்
- சைக்கிளிங் -5 தங்கம் உள்பட 12 பதக்கம்
- நீச்சல் - 4 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம்
- டென்னிஸ் - 4 தங்கம், 2 வெண்கலம்
- ஸ்குவாஷ் -3 தங்கம்
- யோகாசனம் - 3 தங்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்:
இந்தநிலையில், இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சமீபத்திய KheloI ndia இளைஞர் விளையாட்டுகள் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் #விளையாட்டுத் தலைநகராகவும், உலகளாவிய விளையாட்டு மையமாகவும் தனது நிலையை உறுதிப்படுத்துகிறது.
With numerous international sports events and the recent #KheloIndia Youth Games, Tamil Nadu is solidifying its position as the #SportsCapital of India and a global sports hub.
— M.K.Stalin (@mkstalin) February 1, 2024
Making history at the #KheloIndiaYouthGames2023, Tamil Nadu emerged as the Runners Up with an… pic.twitter.com/wQuVNaF7IB
கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023 புதிய வரலாறு படைத்தது தமிழ்நாடு. 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது. இது எங்கள் U-18 சாம்பியன்களின் ஒரு அற்புதமான செயல்திறன் ஆகும்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியை எந்தவொரு குறைபாடும் இன்றி செயல்படுத்தியதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள். வருங்கால நட்சத்திரங்களான நமது திறமையான விளையாட்டு வீரர்களுக்கு இந்த சாதனை வழி வகுக்கும்!” என பதிவிட்டு இருந்தார்.