keezhakarai Jallikattu: கீழக்கரை ஜல்லிக்கட்டு - காளை, காளையர்களுக்கான முன்பதிவு தொடங்கியது..! என்ன ஆவணங்கள் தேவை?
keezhakarai Jallikattu: மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க, காளை மற்றும் காளையர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
keezhakarai Jallikattu: மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை, முதலமச்சர் ஸ்டாலின் வரும் 24ம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம்:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கீழக்கரையில் பெரும் பொருட்செலவில், தமிழக அரசு சார்பில் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 24ம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதைதொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள காளை மற்றும் காளையர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
முன்பதிவு செய்வது எப்படி?
கீழக்கரை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள இருக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம். இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த முன்பதிவில், நாளை நண்பகல் 12 மணி வரை பதிவு செய்திட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இணையதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் உடற்தகுதி சான்றையும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கான மருத்துவச் சான்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
யாருக்கு அனுமதி?
கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம்:
கீழக்கரையில் 66.8 ஏக்கரில் 4,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் ரூ.44 கோடியில் மூன்று தளங்களுடன் பிரமாண்ட மைதானம் உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமர பாதுகாப்பான கேலரிகள் ஹைடெக் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், தற்காலிக விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகம், தங்கும் அறைகள் உள்ளன. 16,921 சதுர அடியில் அமைக்கப்படும் முதல் தளத்தில் விஐபிகள் அமரும் அறை மற்றும் அவர்கள் தங்கும் அறைகள், உணவு வைப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன. 9,020 சதுர அடியில் அமைக்கப்படும் இரண்டாம் தளத்தில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைப்பறையும், 1,140 சதுர அடியில் அமைக்கப்படும் மூன்றாம் தளத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து வசதி:
கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, முக்கியச் சாலைகளில் இருந்து இந்த அரங்குக்கு வருவதற்கு பிரத்யேகமான புதிய இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து கீழக்கரை கிராமத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.