“நாம் போட்டி போடுவது மனிதர்களுடன் அல்ல, நம் கண்ணுக்கு தெரியாத கிருமிகளோடு” - கரூர் ஆட்சியர்
கண்ணுக்கு தெரியாத கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சமுதாயத்தை காக்கும் பெரும் பணியை பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் செய்து வருகிறார்கள் - ஆட்சித் தலைவர் புகழாரம்.
கரூர் மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ(அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், “பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், நானும் ஒரு மருத்துவர் என்பது பெருமிதம் கொள்கிறேன். பொது சுகாதாரத் துறையினுடைய அனைத்து அலுவலர்களுக்கும், இந்த நாளில் கரூர் மாவட்டத்தின் நிர்வாகத்தின் சார்பாகவும், கரூர் மாவட்டத்தின் மக்களின் சார்பாகவும், உங்களை வாழ்த்தி உங்களுக்கு சிரம் தாழ்த்தி, உங்களுடைய சிறப்பான பணிக்கு எங்களுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே எனக்கு இது ஒரு பெருமையான தருணம். அதுவும் நான் ஒரு மருத்துவராக இருந்து நூற்றாண்டின் விழாவின் போது ஒரு மாவட்டத்தினுடைய ஆட்சியராக இருப்பது. எனக்கு ஒரு மிகவும் மகிழ்வை தரக்கூடிய விஷயம் ஆகும். ஏனென்றால், நான் நம்முடைய நாடு விடுதலை அடைந்து 76 ஆண்டுகள் தான் ஆனது. ஆனால், இந்த பொது சுகாதாரத் துறை நூற்றாண்டை கடந்துவிட்டது.
இது நம்முடைய மாநிலத்துடைய சுகாதார கட்டமைப்பு மிகச் சிறப்பாக விளங்குவதற்கு அடித்தளம் ஆகும் என்பதற்கு, இந்த பொது சுகாதாரத் துறை என்பது எந்த சந்தேகமும் இல்லை. பொது சுகாதாரத்துறையின் தந்தை என்று அழைக்கப்படுவது காலரா நோய் தான். நம் பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும், நாம் போட்டி போடுவது மனிதர்களுடன் அல்ல, நம் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளோடு போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறோம். பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா என்பது உங்களுக்கானது. இந்த நூற்றாண்டு என்பது அடுத்த நூற்றாண்டு காலத்திற்கு மிகச் சிறப்பாக நம் நாட்டையும், நம் மாநிலத்தையும், நம் சமுதாயத்தையும் காக்க வேண்டும் என்று இந்த தருணத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். முதலமைச்சர் அவர்கள் உங்களை ஊக்குவிக்கும் வகையில் நூற்றாண்டு விழா, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் போட்டிகள் நடத்தி பாரட்டப்பட்டது” என தெரிவித்தார்.
முன்னதாக பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் பணியாளர்கள், நூற்றாண்டு ஜோதியினை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் சந்தோஷ் குமார், கண்காணிப்பாளர் தெய்வநாதன், தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சைப்புதின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, சமூக நல மற்றும் மகளிர் உரிமை நலத்துறை அலுவலர் நாகலட்சுமி, அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.