கரூரில் சிவா டெக்ஸ்டைல்ஸில் வருமான வரி அதிகாரிகள் திடீர் ரெய்டு
கரூரில் பெரிய ஜவுளி நிறுவனமான, மக்களின் வரவேற்பை பெற்ற சிவா டெக்ஸ்டைல்ஸில் ரைடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கரூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் (சிவா டெக்ஸ்டைல்ஸ்) சரவணன் என்பவருக்கு சொந்தமான தனியார் ஜவுளி நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கியுள்ளனர்.
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர் நகரம், குளித்தலை மற்றும் சேலம், திருப்பூர், ஊட்டி உட்பட ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான கிளைகள், வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கரூர் நகரில் அமைந்துள்ள ஜவுளி நிறுவனத்தில் நான்கு வாகனங்களில் வந்த கோவையை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கரூர் நகரில் அமைந்துள்ள கடை, குடோன், வீடு மற்றும் குளித்தலையில் அமைந்துள்ள ஜவுளி கடை என நான்கு இடங்களிலும் சேலம், திருப்பூர், ஊட்டி ஆகிய கிளைகள் உட்பட மொத்தம் ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவா டெக்ஸ்டைல்ஸின் முன்புறம் கதவு மூடி, உள்ளே வருமான வரி அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கரூரில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. மக்கள் ஆங்காங்கே நின்று கொண்டு சிவா டெக்ஸின் முன்புறம் பார்த்து வருகின்றனர். சிவா டெக்ஸ்டைல்ஸின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் உள்ளேயே மாட்டிக்கொண்டனர். சிவா டெக்ஸ்டைல்ஸின் உள்ளே அலுவலகத்தில், அலுவலக அதிகாரிகளை வைத்து ஆவணங்கள் எல்லாம் சரி செய்யப்பட்டு வருகிறது.
இன்னும் சற்று நேரத்தில் ஆவணங்கள் எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதா, சரியாக உள்ளதா என்று விவரங்கள் தெரிய வரும். அதற்காக மக்கள் வெளியே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.