Udhayanidhi Stalin: ”கரெக்டா டைம்-க்கு வாங்க.. தொண்டர்களை கட்டுப்படுத்துங்கள்!” விஜயை விமர்சித்த உதயநிதி
Udhayanidhi Stalin on Karur Stampede: சொன்ன இடத்திற்கு சரியான நேரத்துக்கு வர வேண்டும் தவெக தலைமையும், தலைவர்களும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உதயநிதி தெரிவித்தார்.

மக்களை சந்திப்பது தலைவர்களின் உரிமை என்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது அந்த இயக்க தலைவரின் பொறுப்பு கூட்டத்திற்கு தாமதமாக வரக்கூடாது என தவெக தலைவர் விஜயை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர கரூர் கோர சம்பவம் குறித்த செய்தியை கேள்விபட்டதும் முதல்வர் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அதேபோல இங்கிருக்கும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களை மருத்துவமனைக்கு வர உத்தரவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தில் 9 குழந்தைகள் இறந்துள்ளனர். 39 பேரில் 30 பேரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய இழப்பு இது. அரசு சார்பாக என்ன செய்ய முடியுமோ அதை செய்துள்ளோம். ஐசியு-க்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளேன். என்ன சிகிச்சை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து கேட்டறிந்தேன்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 200 மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களும், சேலத்தை சேர்ந்த 30 மருத்துவர்கள், நாமக்கல்லைச் சேர்ந்த 9 மருத்துவர்கள், மதுரையைச் சேர்ந்த 49 மருத்துவர்கள், செவிலியர்கள், திண்டுக்கல்லை சேர்ந்த 22 மருத்துவர்கள், புதுக்கோட்டையில் இருந்து 3 மருத்துவர்கள், கோவையில் இருந்து 7 மருத்துவர்கள், திருச்சியில் இருந்து 25 மருத்துவர்கள் இப்போது பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மொத்தம் கரூரில் 200 மருத்துவர்களும், பிற மாவட்டங்களில் இருந்து 145 மருத்துவர்கள் மொத்தம் 345 மருத்துவர்கள் தற்போது பணியில் இருக்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக நிற்கிறோம். ஈடு செய்ய முடியாத இழப்பு இது, இதற்கு மேல் இழப்புகள் ஏற்படக்கூடாது என மருத்துவர்களிடம் கூறியுள்ளோம். அருணா ஜெகதீசன் மதியம் 1 மணி அளவில் விசாரணையை தொடங்க இருக்கிறார். இங்கு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுபவர்களிடம் இந்த சம்பவம் குறித்தும், விபத்து நடந்த இடத்துக்கும் அவர் செல்ல இருக்கிறார். அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
நேரத்திற்கு வந்திருக்க வேண்டும்
இங்கு யாரையும் நான் குற்றம்சாட்ட விரும்பவில்லை, இந்த விஷயத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி தெளிவுப்படுத்தியுள்ளார். மக்களை சந்திப்பது அனைத்து தலைவர்களுக்கும் இருக்கும் உரிமை,அதை யாராலும் தடுக்க முடியாது. தொண்டர்களை கட்டுப்படுத்துவதுஅந்தந்த கட்சி தலைவர்களின் பொறுப்பு.
ஆனால், ஒரு அரசியல் கட்சியாக, தவெக தலைமையும், இரண்டாம் கட்ட தலைவர்களும் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும், மேலும் சொன்ன இடத்திற்கு சரியான நேரத்துக்கு வர வேண்டும் என பல விஷயங்கள் உண்டு. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்”






















