Karur Stampede: கடைசி வரை நேரில் வராத விஜய்.. ஆத்திரத்தில் மக்கள் - தவெக-விற்கு பெரும் பின்னடைவு!
கரூரில் நடந்த பரப்புரையில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறாதது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியல் களத்தில் புதிய போட்டியாளராக களமிறங்கியுள்ள விஜய் நேற்று கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பில், அவரை பார்ப்பதற்காக குவிந்த கூட்டத்தில் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டு 40 பேர் வரை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர வைத்துள்ளது.
40 பேர் மரணம்:
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவருக்கு அவரது ரசிகர்கள் பலத்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திமுக அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் அவர் குறிப்பிட்டதற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து அரசியல் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தது. ஆனால், அவரது ரசிகர்களும், தவெக தொண்டர்களுமே அவருக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கரூரில் நேற்று விஜய்யை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் குவிந்த தொண்டர்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். விஜய் சம்பவ இடத்தில் இருந்தபோதே தொண்டர்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். விஜய் சம்பவ இடத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களிலே உயிரிழப்பு செய்திகள் வரத்தொடங்கியது.
நேரில் வராத விஜய்:
விஜய் கரூரில் இருந்து திருச்சி வருவதற்குள் 30 பேர் உயிரிழந்த தகவல் வெளியானது. உயிரிழந்தவர்களின் சடலங்களும், அவர்களது குடும்பத்தினரும், கடுமையாக காயம் அடைந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மருத்துவமனையில் குவிந்திருந்த நிலையில், விஜய் சம்பவ இடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நடிகர் விஜய்யோ கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்குச் சென்று நேற்று இரவே சென்னை திரும்பினார். இது விஜய் ரசிகர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
விஜய்க்கு பின்னடைவு:
அரசு சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் கரூர் விரைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் போன்ற அரசியல் தலைவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்ற நிலையில், யாரைப் பார்ப்பதற்காகச் சென்று அவர்கள் உயிரை விட்டார்களோ, அந்த தலைவரான விஜய் அவர்கைள நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறாதது பெரிய பின்னடைவாக விஜய்க்கு மாறியுள்ளது.

மேலும், சம்பவம் நடந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்த பிறகே விஜய் இரங்கல் தெரிவித்தார். அரசியலுக்கு புதுமுகமான விஜய் இந்த சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? என்றே அரசியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆத்திரத்தில் மக்கள்:
அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்க்கவில்லை. மேலும், கரூர் மருத்துவமனைக்கு தவெக நிர்வாகிகள் யாரும் நேரில் சென்று இரங்கல் தெரிவிக்காததும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தன்னைப் பார்க்க வந்த தொண்டர்களும், அவர்களது குழந்தைகளும் உயிரிழந்ததற்கு நேரில் அஞ்சலி செலுத்த வராத விஜய் மீது தவெக தொண்டர்களுக்கே அதிருப்த உருவாகியுள்ளது. பொதுமக்களும் இந்த சம்பவத்தால் விஜய் மீது ஆத்திரம் அடைந்துள்ளனர்.
அதேசமயம், கரூரில் நடந்த இந்த துயர சம்பவத்தால் மீண்டும் விஜய் பாதிக்கப்பட்டவர்களை காண மருத்துவமனைக்குச் சென்றால் மீண்டும் கூட்டம் அதிகரித்து பாதிப்பு அதிகரிக்கும் என்று காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





















