பள்ளப்பட்டியில் கழிவுநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சிறுவன்; இறப்புக்கு காரணம் இதுதான்
சிறுவன் உயிரிழப்பிற்கு பேரிடர் காரணம் என்று கூறுகிறீர்கள். ஆனால். இல்லை இதற்கு நிர்வாகம் தான் காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன் வைத்தார்.
பள்ளப்பட்டியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பொழுது கழிவுநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் தாய்மாமன் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆட்சியர் முன் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் கனமழையின் காரணமாக கடந்த 08.10.2024 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வரும் முகமது உஸ்மான் (12) சிறுவன் மிதிவண்டியில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது ஹபீப் நகர் செல்லும் பொழுது, கழிவுநீர் வடிகாலை நகராட்சி நிர்வாகம் கான்கிரீட் தளம் கொண்டு மூடாததாலும், சாலை வசதி சரியான முறையில் இல்லாததாலும் சிறுவன் கழிவு நீர் வடிகாலில் விழுந்து இழுத்துச் செல்லப்பட்டு 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நங்காஞ்சி ஆற்றுப்பகுதியில் சிறுவனை தீயணைப்புத் துறையினர் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து சடலமாக மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை முடிவடைந்து குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஹபீப் நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் சிமெண்ட் மூடிகள் கொண்டு மூடாமல் திறந்து இருந்த காரணத்தாலும் அப்பகுதியில் சாலை சரியான முறையில் இல்லாததாலும், இது குறித்து புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தின் காரணத்தால் சிறுவன் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைத்தனர்.
இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் முகமது உஸ்மான் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்து சிறுவன் உயிர் இழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என குடும்பத்தினரிடம் உறுதியளித்தார். குறிப்பாக உயிரிழந்த சிறுவனின் தாய் மாமன் ஷேக் பரீத் மாவட்ட ஆட்சியரிடம் நடந்த சம்பவம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் நகராட்சியில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது எனவும், சிறுவன் உயிரிழந்த பிறகு மாவட்ட நிர்வாகம் மற்றும் இங்கு நிற்கும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கூட வரவில்லை எனவும்,
சிறுவன் உயிரிழப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது தற்போது வரை ஃபோன் எடுக்கவில்லை எனவும், தேர்தலின் போது ஓட்டு கேட்டு வந்ததோடு சரி தற்போது வரை வரவில்லை எனவும் சிறுவன் உயிர் இழப்பிற்கு நிர்வாகம் தான் காரணம் எனக் கூறினார். மேலும் நானும் அரசாங்கத்தில் தான் வேலை பார்த்து வருகிறேன் எனவும் சிறுவன் உயிரிழப்பிற்கு பேரிடர் காரணம் என்று கூறுகிறீர்கள். ஆனால். இல்லை இதற்கு நிர்வாகம் தான் காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன் வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் சமாதானப்படுத்தி அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என கூறினார். பாதிக்கப்பட்ட நபர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் முன் வைத்த போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனைவர் ஜான், அரசு அதிகாரிகள் அனைவரும் அமைதி காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.