குப்பைகளை அள்ள கட்டாய கட்டணம் வசூல்; நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்
கரூர் பள்ளப்பட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாக இருந்து வருகிறது. வருடம் தோறும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான உருஸ் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கரூர் பள்ளப்பட்டி பகுதியில் தரைக்கடை வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாக இருந்து வருகிறது. பள்ளப்பட்டி பகுதியில் வருடம் தோறும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான உருஸ் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 264-ஆம் ஆண்டு உருஸ் திருவிழா வருகின்ற 26,27,28 மூன்று நாட்கள் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தரைக்கடை வியாபாரிகள் பொம்மை, விளையாட்டு பொருள்கள், உணவு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைப்பதற்காக நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கடிதம் வாங்குவதற்காக சென்ற பொழுது 100 சதுர அடி நிலத்திற்கு 375 ரூபாய் மற்றும் குப்பை அள்ளுவதற்கு 100 ரூபாய் என ஒரு நாட்களுக்கு 475 ரூபாய் என பத்து நாட்களுக்கு அனைவரிடமும் 4750 ரூபாய் கட்டணம் கட்டாய வசூல் செய்து வந்தனர்.
குறிப்பாக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 280 சதுர அடி நிலத்திற்கு 10 நாட்களுக்கு 11,500 ரூபாய் கட்டணம் வசூல் செய்துள்ளனர். மூன்று நாள் திருவிழாவிற்கு 10 நாள் பணம் செலுத்தினால் மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறியுள்ளனர். இதனை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை கார்னர் பகுதியில் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சம்பவத்திற்கு வந்த அரவக்குறிச்சி காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் உத்தரவின் அடிப்படையில் ஐந்து நாட்களுக்கு மட்டும் பணம் வசூலிக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.