கரூர் வாங்கல் சாலையில் மலைப்போல் குவிந்து கிடக்கும் குப்பை; கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
கரூர் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை.
கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் இருந்து சற்று தொலைவில் கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைக்கழிவுகள் ஆகியவற்றை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் நாள்தோறும் சேகரிக்கப்படும். பின்னர் அந்த குப்பைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு வாங்கல் சாலையில் உள்ள கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து அவற்றை உரம் தயாரிக்கும் பணிக்கு பயன்படுத்தி வந்தனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடைக்கிறது. புகை மண்டலமாக கோடை காலங்களில் வெயில் அதிகமாக இருக்கும் போது குப்பை கிடங்கில் திடீரென தானாக தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடக்கும். அப்போது கரூர் - வாங்கல் சாலையில் புகை வெளியேறி, அந்த பகுதி முழுவதும் புகைப்படமாக காட்சி அளிக்கும்.
மலை போல் காட்சி அளிக்கிறது.
இதுதொடர்பாக அரசு காலனியைச் சேர்ந்த சேகர் கூறுகையில், கரூர் வாங்கல் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. வயல்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் வந்து விழுகின்றன. இதனால் மாடுகள் மேய்க்க முடியவில்லை, மாடுகள் பிளாஸ்டிக் பேப்பர்களை விளங்கும் நிலையும் உள்ளது. விரைவில் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்றார்.
பதினாறுகால் மண்டபத்தைச் சேர்ந்த மோகன் கூறுகையில், “கரூர் வாங்கல் சாலையில் இருக்கும் குப்பை கிடங்கில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. சாலையை கடந்து செல்லும் போது மூக்கை பிடித்துச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் தீப்பிடித்து எரியும்போது அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கும். இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாது. இதனால் மாற்றுப் பாதையில் வாகனங்களை திருப்பி விடுவார்கள். தற்போது காற்றின் காரணமாக குப்பை கிடங்கில் இருந்து குப்பைகள் சாலையில் விழுவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. ஒரு பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டு விட்டன மறுபடியும் குப்பைகள் குவிந்துள்ளன அந்த குப்பைகளையும் விரைவில் அகற்ற வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.