அதிக வட்டி வசூல்... கதறிய குடும்பம்... கரூரில் திமுக பிரமுகர் கைது
கடன் தொகையை திரும்பச் செலுத்திய பிறகும், அசல் தொகை அப்படியே உள்ளது எனக் கூறி வெற்று பத்திரம் உள்ளிட்ட வீடு நிலம் சம்பந்தமான பத்திரங்களை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.
கரூரில் தரகம்பட்டி அருகே கடவூர் பகுதியில் அதிக வட்டி வசூலிப்பதாக புகாரை அடுத்து அடுக்கடுக்காக குவிந்த புகார் மனு அடிப்படையில், திமுக பிரமுகர் திருவேங்கடத்தை பாலவிடுதி போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே கடவூர் பகுதியில் உள்ள சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மனைவி சண்முகப்பிரியா, கடவூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பதவி வகித்து வருகிறார். தனது மனைவி திமுகவில் ஒன்றிய துணைச் செயலாளர் பொறுப்பில் இருப்பதை வைத்து, மக்கள் பணி செய்வதாகக் கூறி பணத் தேவை உள்ளவர்களைக் கண்டறிந்து, குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை வட்டிக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், முறையாக வட்டித்தொகை செலுத்தினாலும், வட்டிக்கு வட்டி கணக்கு செய்து கடன் தொகையை அசலில் சேர்த்தும், குறிப்பிட்ட தேதிக்குள் கடன் தொகையைச் செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்து கடன் பெறுவோரை நெருக்குதலுக்கு உள்ளாக்கியாதாக கூறப்படுகிறது. இதற்கு ஒத்து வராதவர்களை பொது இடத்தில் வைத்து திட்டி அவமானப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதுகுறித்து கேள்வி கேட்போரை, தனது வீட்டுக்கு வரவழைத்து அங்கு தகாத வார்த்தைகளால் பேசி கடன் பெற்றவர்களை தாக்குவதாக பாலவிடுதி காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் குவிந்துள்ளது. இது குறித்து காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததாகக் கூறி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மற்றும் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பிரோஸ் கான் அப்துல்லா ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் கண்ணீர் மல்க கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, கடவூர் அருகே உள்ள முள்ளிப்பாடி ஊராட்சியில் வசிக்கும் கருப்புசாமி (59) என்பவர், திருவேங்கடமிடம் வாங்கிய நான்கு லட்சம் கடன் தொகையை திரும்பச் செலுத்திய பிறகும், அசல் தொகை அப்படியே உள்ளது எனக் கூறி வெற்று பத்திரம் உள்ளிட்ட வீடு நிலம் சம்பந்தமான பத்திரங்களை, மிரட்டி வாங்கியதாக ஆகஸ்ட் 18ஆம் தேதி பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதன் பேரில் திருவேங்கடத்தை போலீசார் கைது செய்தனர்.
மேலும், குளித்தலை நீதிமன்றத்தில் திருவேங்கடத்தை ஆஜர் செய்து குளித்தலை கிளைச் சிறையில் அடைத்துள்ள நிலையில் மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.