Karur: ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி; காகித ஆலை பெண் ஊழியர் மீது புகார்
அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணி பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 2021 ஆம் ஆண்டு தவணை முறையில் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
கரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக 5 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக டி.என்.பி.எல் காகித ஆலை பெண் ஊழியர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் அடுத்த சோளகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தீபா இவர் பி.ஏ., பி.எட்., முடித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் சக்திவேல் உடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மூலமாக புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் ஸ்டோர் இன்சார்ஜ் ஆக பணிபுரிந்து வரும் மீனாட்சி என்பவர் அறிமுகம் கிடைத்துள்ளது.
மீனாட்சி தனக்கு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, சம்பத் ஆகியோரை நன்கு தெரியும் என்றும், சக்திவேல் மனைவி தீபாவிற்கு டிஎன்பிஎல் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணி பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 2021 ஆம் ஆண்டு தவணை முறையில் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். மீனாட்சி என்பவருக்கு உடந்தையாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன் என்பவரும் ஆதரவாக பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகிள்ளது.
இந்த நிலையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடியில் ஈடுபட்ட மீனாட்சி மீது கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபா தனது கணவர் சக்திவேலுடன் வந்து புகார் மனு அளித்தார். மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து விட்டு வெளியே வந்த தீபா செய்தியாளர்களை சந்தித்து, மீனாட்சியிடம் பணம் கொடுத்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்கள் ஆகியவற்றை வெளியிட்டார். அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை வாங்கி தருவதாக டிஎன்பிஎல் காகித ஆலையில் பணிபுரியும் அரசு ஊழியர் ஒருவர் மோசடியில் ஈடுபட்ட வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.