விஜய் காங்கிரஸில் இணைய திட்டம்? ராகுலுடன் சந்திப்பு - ஜோதிமணி பரபரப்பு தகவல்: திமுக கூட்டணி தொடருமா?
விஜய் கடந்த 2010-ல் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய வந்தவர், அன்று சில காரணங்களால் அது நடக்கவில்லை. அவர் எங்களுக்கு தெரியாத நபரும் அல்ல.

”விஜய், காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல. சமூக வலைதளங்களில் வருவதை வைத்து கூட்டணியை முடிவு செய்ய இயலாது. நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதனால் கூட்டணி குறித்து பேச இன்னும் காலம் இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கரூரில் எம்பி ஜோதிமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
12 மாநிலங்களில் புதிய விண்ணப்பம் கொடுத்து வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கின்றனர். இது குடியுரிமை திட்டம். பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் மட்டும் திருத்தம் செய்யாமல், குடிமக்கள் பதிவேடு திருத்தம் செய்கிறார்கள். குடியுரிமையை சரி பார்க்கும் பணி தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. உள்துறைக்கு சொந்தமானது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, SIR வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, பாஜக ஆளாத தமிழ்நாடு, கேரளாவில் செயல்படுத்துவதன் நோக்கம் என்ன?
30 நாளில் குடியுரிமை திருத்தம் செய்ய முடியுமா? வாக்காளர் திருத்தமாக இருந்தால் இன்று முடிந்திருக்கும். 95% முடித்து விட்டதாக சொல்கிறீர்கள். ஆனால், அது உண்மை இல்லை, பல குளறுபடி இருக்கிறது.
தேர்தல் ஆணையத்திற்கும், பாஜகவிற்கும் நம்மை பார்த்தால் ஏமாளி போல் தெரிகிறதா? பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு நிலைப்பாடும், பாஜக ஆளாத மாநிலங்களில் ஒரு நிலைப்பாட்டுடன் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

காங்கிரஸ் - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு..,
விஜய் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல. விஜய் கடந்த 2010-ல் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய வந்தவர், அன்று சில காரணங்களால் அது நடக்கவில்லை. அவர் எங்களுக்கு தெரியாத நபரும் அல்ல. கரூர் துயர சம்பத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பேசியது போல், அவரும் பேசினார்.
சமூக வலைதளங்களில் வருவதை வைத்து கூட்டணிகளை முடிவு செய்ய இயலாது. நாங்கள் இப்போதும் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அதனால் கூட்டணி குறித்து பேச இன்னும் காலம் இருக்கிறது என்று கூறினார்.





















