கரூரில் 12 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத நூலகம் - அரசு நடவடிக்கை எடுக்குமா..?
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிந்தலவாடி ஊராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 3.5 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்டப்பட்டது.
கரூர் மாவட்டம் சிந்தலவாடியில் 12 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள நூலகம். பள்ளி மாணவ, மாணவர்களின் நலன் கருதி நூலகத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளானர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிந்தலவாடி ஊராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 3.5 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்டப்பட்டது. ஆனால் நூலகம் கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்ட நான்கு மாதங்களிலேயே நூலகம் மூடப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நூலகத்தினை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நூலக கட்டிடம் தற்போது சிமெண்ட், ஊராட்சி தளவாட பொருட்கள் வைக்கப்படும் குடோனாகவும், அருகில் உள்ள சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் பொருட்கள் வைப்பதற்கான இடமாகவும் உள்ளது. மேலும் இந்த நூலக கட்டிடத்தில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை உடைத்து வீட்டும் செல்கின்றனர். மேலும் நூலகத்திற்கு அருகிலேயே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகள் பொது அறிவினை வளர்த்துக் கொள்வதற்காக நூலகத்திற்கு புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய இடத்தில் மது பிரியர்களின் மது அருந்தும் கூடாரமாக தற்போது மாறிவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உடனே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி கல்வி அறிவினை மேம்படுத்தும் வகையில் நூலகத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் சார்பில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று காசநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து அரசு கலைக் கல்லூரி வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் காசநோயின் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு கோஷமிட்டும், காசநோய் குறித்த விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தி சென்றனர். இதில் சுகாதாரத்துறையில் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், அரசுத்துறை அலுவலர்கள், செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காசநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு பின்பு பல வண்ண நிற பலூன்களை வானில் பறக்க விட்டனர்.