கரூர் : ”உங்கள் இடத்திற்கே வரும் உணவு” - செந்தில் பாலாஜி ஃபவுண்டேஷன் குறித்து பேசிய அமைச்சர்
'ஊரடங்கு காலத்தில் உணவு தேவைப்படுவோருக்கு இலவச உணவு தயாரிக்கப்பட்டு வரும் பணிகளை மேற்பார்வையிட்டு, உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்தார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வி.செந்தில்பாலாஜி ஃபவுண்டேஷன் இணைந்து செயல்படுத்தும் 'ஊரடங்கு காலத்தில் உணவுத் தேவைப்படுவோருக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் இதுவரை 48,562 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பிரேம் மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வி.செந்தில்பாலாஜி பவுண்டேஷன் இணைந்து 'ஊரடங்கு காலத்தில் உணவுத் தேவைப்படுவோருக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்திற்காக உணவு தயாரிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நேரில் பார்வையிட்டு, உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் இத்திட்டத்தை பற்றி பேசினார்.
தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் உணவு இல்லாமல் யாரும் பசியால் வாடவில்லை என்ற உன்னத நிலையை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் "வி.செந்தில்பாலாஜி பவுண்டேஷன்" சார்பில் உணவுத்தேவைப்படும் முதியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட நபர்களுக்கு இலவசமாக வீடுகளுக்கே சென்று உணவு வழங்கிடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் உணவுத்தேவைப்படுவோர் தங்கள் விபரங்கள் குறித்து முன்பதிவு செய்வதற்காக 9498747644, 9498747699 என்ற எண்கள் வழங்கப்பட்டிருந்தது. இதுவரை மொத்தம் 48,562 நபர்களுக்கு இருப்பிடத்திற்கே சென்று உணவு வழங்கப்பட்டுள்ளது.
150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வி. செந்தில் பாலாஜி பவுண்டேசன் மூலம் தன்னார்வலராக சேவையாற்றி வருகின்றனர். தன்னார்வ பணியாற்றும் இளைஞர்களுக்கு வி.செந்தில் பாலாஜி பவுண்டேஷன் மூலம் முகக்கவசம், கையுறை அணிந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உணவு தயாரித்தல் மற்றும் மக்களின் வீடுகளுக்கே சென்று உணவு வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். கடந்த வாரத்தில் தொடங்கப்பட்ட இந்த உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் பல்வேறு மாவட்ட மக்கள் பயன்பெற்று வருவதாகவும் இதனை சிறப்பான முறையில் செய்துவரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வி.செந்தில்பாலாஜி பவுண்டேஷனுக்கு உணவு பெற்று வரும் பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் திமுக முக்கிய நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தற்பொழுது தொடங்கியுள்ள, போன் செய்தால் வீடு தேடி வரும் உணவு வழங்கும் திட்டம் மக்களின் பாராட்டைப் பெற்றுவருகிறது