(Source: ECI/ABP News/ABP Majha)
வாரிசு சான்றிதழ் கேட்டு பெண்மணி உண்ணாவிரத போராட்டம் - கரூரில் பரபரப்பு
வாரிசு சான்றிதழ் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என எழுதப்பட்டிருந்த பதாகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வாரிசு சான்றிதழ் கேட்டு பெண்மணி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வட்டாட்சியர் நேரில் வந்து விளக்கம் அளித்த பின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.
கரூர் எஸ்.வெள்ளாளப்பட்டி, தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சர்மிளா குப்புசாமி ஜனவரி மாதம் விடுமுறைக்கு வந்தபோது வாரிசு சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் வருவாய் துறைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதேபோல் வாரிசு சான்றிதழ் கேட்டு மூன்று முறை ஆன்லைனில் விண்ணப்பித்தும், மூன்று முறையும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், குப்புசாமி மனைவி சர்மிளா கரூர் தாலுகா அலுவலகம் முன்பு அவரது உறவினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வாரிசு சான்றிதழ் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என எழுதப்பட்டிருந்த பதாகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் வட்டாட்சியர் முனிராஜ் மற்றும் நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சர்மிளாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வட்டாட்சியர் முனிராஜ், உங்களது விண்ணப்பத்தின் மீது கள ஆய்வு செய்தபோது மற்ற வாரிசுதாரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் உங்களது வாரிசு சான்றிதழ் நிராகரிக்கப்பட்டு உள்ளது என்றார். மேலும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து வாரிசு சான்றிதழ் பெற்று கொள்ளலாம் என்றார். இதனையடுத்து ஷர்மிளா மற்றும் அவரது உறவினர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.