கரூரில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டம் .....தூய்மை பணி செய்த மாவட்ட ஆட்சியர்...!
ஒவ்வொரு மக்களுக்கும் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நமது இடத்தினை பசுமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய தலையாய நோக்கமாகும்.

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி பகுதியிலுள்ள மொச்சக்கொட்டம்பாளையம் கிராமத்தில் "நம்ம ஊரு சூப்பர்" என்ற இயக்கத்தின் மூலம் தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பார்வையிட்டார். அப்போது கோவிந்தம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தூய்மை பணி மேற்கொண்டார். மேலும், தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம், இருகரம் கூப்பி தனது நன்றியை தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து "நம்ம ஊரு சூப்பரு" என்ற மாபெரும் இயக்கம் மாநிலம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி கிராமங்களிலும் பல்வேறு பணிகள் இயக்கத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு மக்களுக்கும் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நமது இடத்தினை பசுமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய தலையாய நோக்கமாகும். குறிப்பாக மாவட்டத்தில் எந்தெந்த ஊராட்சி கிராமங்களில் சாலையோரங்களில் மக்கள் குப்பைகள் தேங்கி உள்ளதை துர்நாற்றம் வீசக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அந்தப் பகுதிகளை தூய்மையாக்குவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல இயந்திரங்கள், மக்களைக் கொண்டு தூய்மை பணியாளர்கள் கொண்டு தூய்மை செய்வதற்கு 456 இடங்களை கண்டறியப்பட்டு 23.08.2022 முதல் 02.09.2022 வரை இந்தத் தூய்மை பணிகள் செய்வதற்காக செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது.
267 குப்பை தேங்கியுள்ள அல்லது அதிகம் உள்ள முக்கிய பகுதிகளை கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு தூய்மைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதே போல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் தூய்மை, சுகாதாரம் மற்றும் கழிவுகள் மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய திட்டங்களும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தனிநபர் இல்லங்களில், கிராமப்புற பகுதிகளில் சுகாதாரம் பேணுவது தொடர்பாக சுய உதவி குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அந்தப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நெகிழி பயன்பாடு ஒரு முறை பயன்படுத்துவதை குறைப்பதற்காக மீண்டும் மஞ்சப்பை இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சுத்தமான பசுமை கிராமங்களை உருவாக்குவதற்கு அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டும், கரூர் புத்தகத் திருவிழாவில் நடைபெற்று வரும் பணிகளில் ஒவ்வொரு வாசகர்களுக்கும் தலா ஒரு மரக்கன்றுகள் வழங்கி கண்காணித்து வருகிறோம். அதேபோல மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு இரண்டு லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வருகின்றோம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

