கரூரில் தரம் இல்லாத தார் சாலை; வைரலான வீடியோ - ஆட்சியர் நேரில் விசிட்
கரூர் கடவூர் ஊராட்சி ஒன்றியம் தரங்கம்பட்டி வீரசிங்கம்பட்டி வரையிலான தார்சாலையினை புனரமைக்கும் தரமற்ற சாலை போடப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி, ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.
கரூரில் தரம் இல்லாத தார் சாலை போடப்பட்டதாக வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட சாலையை நேரில் ஆய்வு மேற்கொண்டு சாலையின் தரம் குறித்து ட்விட்டர் மூலம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம் தரங்கம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி வரையிலான தார்சாலையினை புனரமைக்கும் போது தரமற்ற சாலை போடப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி, ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.
ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்தியை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று தார் சாலையின் தரம் குறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வீரசிங்கம்பட்டி பொதுமக்களிடம் சாலை அமைக்கும் பணி முடிந்து 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை சாலை இறுகுவதற்கு கால நேரம் எடுக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், இரண்டு ஒப்பந்ததாரர்களிடையே இருந்த தொழில் போட்டி காரணமாக சாலை தரமில்லாமல் போடப்பட்டிருப்பதாக சிலர் வேண்டுமென்றே சாலை அமைத்த சிறிது நேரத்தில் வந்து சேதப்படுத்தி வீடியோவை பரப்பி இருப்பதாக தெரிவித்தார். மேலும், ஆய்வுப் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சாலையின் தரம் குறித்த விளக்கம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.