சுங்ககட்டண வசூலை நிறுத்த பரிந்துரைக்க நேரிடும் - ஆட்சியரின் எச்சரிக்கையை தொடந்து களத்தில் இறங்கிய அதிகாரிகள்
’’சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும், சுங்கச் சாவடியினை ரத்து செய்யவும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் செடுஞ்சாலை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க நேரிடும் என்றும் எச்சரித்து இருந்தார்’’
கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும், திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலன் செட்டியூர் பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும் அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் மாவட்டத்தில் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், அப்பகுதிகளில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து மாவட்ட அளவில் நடைபெறும் சாலை பாதுகாப்புக் குழுவின் பல கூட்டங்களில் குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரபுசங்கர், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும், உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதாகைகள் வைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார். ஆனால் மத்திய அரசின் அனுமதியுடன் சுங்கட்டணம் வசூல் செய்துவரும் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
இது குறித்த விளக்கத்தினை 10 நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த 4 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி 10 நாட்களுக்குள் பதிலளிக்க தவறினால் சட்ட விதிகளுக்குட்பட்டு சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும், சுங்கச் சாவடியினை ரத்து செய்யவும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் செடுஞ்சாலை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க நேரிடும் என்றும் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் இன்று இது தொடர்பான பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் அறிக்கை அளித்ததன் அடிப்படையில் கரூரை அடுத்த சுக்காலியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஒன்றிணையும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சாலைகள் அமைக்கப்படுவது குறித்தும், துப்புரவு பணிகள் நடைபெறுவது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
மேலும், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சுங்க சாவடி மேலாளர்களிடம் இது தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தார். அப்போது, ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டங்களுக்கு பிரதிநிதிகளை அனுப்பாமல் சம்மந்தப்பட்ட அதிகாதிகளே கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரபு சங்கர், நோட்டீஸ் அளிக்கப்பட்டதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். தரம் உள்ளிட்ட மேற்கொண்டு வரும் பணிகள் திருப்திகரமாக இருந்தால் கொடுக்கப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்படும், குறைபாடுகள் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.