கரூரில் சைக்கிளில் குறுக்கே வந்த நபர்; பிரேக் போட்டதால் நேரிட்ட விபத்து
சைக்கிளில் வந்தவர், கல்லூரி பேருந்து ஓட்டுநர், மாணவர் ஒருவர் என 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கரூரில் முன்னால் சென்ற கல்லூரி பேருந்து மீது அரிசி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. சைக்கிளில் குறுக்கே வந்த நபர் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் பிரேக் போட்டு நிறுத்தியதால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், பாச்சலில் தனியார் (பாவை) கல்லூரி செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் கரூரில் பல இடங்களில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு தொழிற்பேட்டை வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென சாலையின் குறுக்கே வந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தியதால், பின்னால், மணப்பாறையிலிருந்து அரிசி ஏற்றிக் கொண்டு தொழிற்பேட்டைக்கு வந்த லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் கல்லூரி பேருந்தின் பின்பக்க கண்ணாடி, பாடி உடைந்தது. அதே போன்று லாரியின் முன்பக்கத்தின் இடது பக்க கண்ணாடியும், பாகங்களும் சேதமானது. இதில் சைக்கிளில் வந்தவர், கல்லூரி பேருந்து ஓட்டுநர், மாணவர் ஒருவர் என 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இவர்கள் 3 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென சாலைக்குள் சைக்கிளில் வந்த நபரால் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டதால், பின்னால் வந்த லாரி மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.