தவிட்டுப்பாளையம் பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து - உயிர் தப்பிய டிரைவர்
லாரி கவிழ்ந்ததால் சேலத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தவிட்டுப்பாளையம் பகுதியில் தேங்காய் நார் பஞ்சுகளை ஏற்றி வந்த லாரி அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே செயல்பட்டு வரும் தேங்காய் நார் தயாரிக்கும் மில்லில் இருந்து லாரியில் தேங்காய் நார் பஞ்சுகளை மூட்டை மூட்டையாக அதிக அளவில் லாரியில் ஏற்றி பரமத்தி வேலூரில் இருந்து பொள்ளாச்சி பகுதிக்கு செல்வதற்காக லாரி அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது, கரூர் மாவட்டம் புகலூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் தேங்காய் நார் பஞ்சுகளை ஏற்றி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தவிட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகில் இரண்டு புறமும் வைத்திருந்த இரும்பு தடுப்புகள் மீது மோதி கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஒட்டி வந்த லாரி டிரைவரும், அருகாமையில் நின்று கொண்டிருந்த லாரி டிரைவரும் உயிர் தப்பினர்.
விபத்தால் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக எந்த வாகனமும் வராததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் லாரி கவிழ்ந்ததால் சேலத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் மாற்று லாரி மூலம் கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்த தேங்காய் நார் பஞ்சு மூட்டைகளை லாரியில் ஏற்றப்பட்டது . கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன்எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.