கருணாநிதி நூற்றாண்டு விழா.. பிரமாண்டமான நடைபெற்ற மாரத்தான் போட்டி.. 73 ஆயிரம் பேர் பங்கேற்பு
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பன்னாட்டு மாராத்தான் போட்டி நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பன்னாட்டு மாராத்தான் போட்டி நடைபெற்றது.
கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதிக்குள் பல திட்டங்கள் தமிழ்நாடு அரசால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அந்த வகையில் இல்லத்தரசிகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. மேலும் கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் கோட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்பாட்டு வந்துள்ளன.
பன்னாட்டு மாரத்தான் போட்டி
இதனிடையே திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு மாரத்தான் போட்டியானது தொடங்கியது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொத்தம் 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ., ஆகிய 4 பிரிவுகளில் இந்த போட்டியானது நடைபெறுகிறது. அனைத்து பிரிவுகளும் கருணாநிதி நினைவிடம் தொடங்கி தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைகிறது.
இந்த போட்டி காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழியாக நடைபெறுகிறது. இதற்கான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பரிசுத்தொகை எவ்வளவு?
சுமார் 73 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ள இந்த மாரத்தான் போட்டியில் 42 கி.மீ., மற்றும் 21 கி.மீ., பிரிவில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2வது பரிசாக ரூ.50 ஆயிரம்., 3வது பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. 10 கி.மீ, பிரிவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ.25 ஆயிரம், 3ஆம் பரிசு ரூ.15 ஆக வழங்கப்படுகிறது. கடைசியாக 5 கி.மீ. பிரிவில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2வதாக ரூ.15 ஆயிரம், 3வதாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்கவிழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.