இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
இன்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலையிலே பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபத்திருவிழாவே ஆகும். கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டிலே சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும்.
அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்:
கார்த்திகை மாதம் பிறந்தது முதலே திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 4ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. தீபத் திருவிழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் திருவண்ணாமலை சாமி உற்சவம், மகா தேரோட்டம் என விழாக்கோலம் பூண்டது.
இந்த நிலையில், தீபத் திருவிழாவின் மிக மிக முக்கியமான நாளான கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் என்றாலே அதிகாலையிலே அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதன்படி, இன்று அதிகாலை 3.30 மணிக்கு அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.
மாலையில் மகா தீபம்:
இன்று கார்த்திகை தீபம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை பாதிக்கப்பட்டபோதிலும் பக்தர்கள் கூட்டம் சிறிதும் குறையவில்லை. கோயிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். ஆனால், மண் சரிவு, கனமழை அபாயம் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் இந்த முறை மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி தந்ததன் காரணமாகவே திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று காலையே மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள்:
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே பக்தர்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றுவது வழக்கம். 2 ஆயிரத்து 688 அடி உயரம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை நேரில் தரிசிக்க, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாதீபம் முழுக்க முழுக்க நெய்யில் நனைக்கப்பட்ட திரியால் ஏற்றப்படுவது வழக்கம். தீபம் ஏற்றுவதற்காக அதிகளவிலான காடாத்துணி மற்றும் நெய் பயன்படுத்தப்படுவது ஆண்டுதோறும் வழக்கம்.
மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் இன்று ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை காண பக்தர்கள் வரும் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது. சுமார் 35 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் ஆயிரக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி, கோவை என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மட்டுமின்றி மற்ற சிவாலயங்களிலும் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும், கார்த்திகை தீபம் முருகப்பெருமான் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால் முருகப்பெருமான் கோயில்களிலும் கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களில் வழக்கத்தை விட அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.