Kallakurichi Video: விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்த கந்தனின் கடைசி வீடியோ: பேச முடியாமல் தவிக்கும் அதிர்ச்சி காட்சி
kallakurichi Video: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்த கந்தன் என்பவரின் கடைசி வீடியோவானது , பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்த கந்தன், கடைசியாக பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சோகமான நிகழ்வு ஏற்பட்டுள்ள நிலையில் , இச்சம்பவம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "பெண்கள் 9 பேர், திருநங்கை ஒருவர் என 168 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும் அதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
48 பேரில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 25 பேரும், புதுவை ஜிப்மரில் 3 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 16 பேரும், விழுப்புரத்தில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 3 பெண்கள் மற்றும் 1 திருநங்கையும் அடங்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது, இரவு 8 மணிப்படி 51 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த கந்தன்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கந்தன் என்பவர் விஷச்சாராயத்தை அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றதும், அவருக்கு வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
அதிர்ச்சியளிக்கும் வீடியோ:
இறப்புக்கு முன்பு, கந்தன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், அருகில் இருப்பவர் கேட்கிறார், என்ன பன்னுது என்று, அதற்கு கந்தனால் பதிலளிக்க முடியவில்லை, பேச முடியாமல் தவிப்பதை பார்க்கப்படுகிறது. அதற்கு , அந்த நபர் மீண்டும் கேட்கிறார், என்ன சாப்பிட்டார் என்று. அதற்கு, அந்த வீட்டில் உள்ள பெண் தெரிவிக்கிறார், ஒரு பாக்கெட் சாராயம் சாப்பிட்டார், கருணாபுரத்தில் சாப்பிட்டார் என்றும் தெரிவிக்கிறார். என்ன பன்னுது என்று கேள்வி கேட்க, அதற்கு கந்தனால், எதுவும் சொல்ல முடியவில்லை, வாயில் கை வைத்து வாந்தி எடுப்பதை போன்று சைகை காண்பிக்கிறார்.
இந்நிலையில், இந்த காட்சியை, பார்க்கும் போது பெரும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. விஷச் சாராயம் அருந்தி பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கந்தன் பேசும் வீடியோ வெளியானதால் பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்தனுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும், இவரின் உழைப்பில்தான் குடும்பம் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.