Kanchipuram Fire Accident: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து; 9 பேர் உயிரிழப்பு, நில அதிர்வை உணர்ந்த மக்கள் - நடந்தது என்ன..?
"9 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் ஆபத்தான நிலையை சிகிச்சை பெற்று வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் ஆலை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஓரிக்கை குருவிமலை பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான " நரேன் ஃபயர் ஒர்க்ஸ்" என்ற பெயரில் பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் மற்றும் பட்டாசுகள் பாதுகாத்து வைக்கப்படும் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நாட்டு பட்டாசுகள் என சொல்லக்கூடிய, குறிப்பாக திருவிழா காலங்களில் பயன்படுத்தக்கூடிய அதிர்வெட்டுகள், வண்ண பட்டாசுகள், வானம் , சரம் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள்
இந்த நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில், திடீரென பயங்கர சத்தத்துடன் , பட்டாசு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூலக்கூறுகள் வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ முழுவதும் பரவி பட்டாசு ஆலை பகுதியில் செயல்பட்டு வந்த மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனை தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஆலை செயல்பட்டு வந்த இடத்திலிருந்து 4 கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின. அப்பொழுது, அந்தப் பகுதியில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 27 பேர் தீ விபத்தில் சிக்கி தவித்தனர். பயங்கர சத்தத்துடன் நடைபெற்ற இந்த விபத்தின், காரணமாக சுற்று வட்டாரத்தில் இருந்த 5 கிலோமீட்டர் வரை அதிர்வு ஏற்பட்டு , தொடர்ந்து புகை மூட்டமாக அந்த பகுதி காட்சியளிப்பது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதை பார்த்தவுடன், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைக்கும் வாகனங்களை பயன்படுத்தி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் கட்டிட இடுப்பாடுகள் மற்றும் தீயில் சிக்கிய அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சையில் பாதிப்படைந்தோர்
மேலும் , அந்த தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் சிகிச்சைக்காக 27 பேர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றில் 15க்கும் மேற்பட்ட , நபர்களுக்கு 50 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் அடைந்துள்ளனர். மேலும் 6 பேருக்கு 90 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த , பூபதி, விஜயா மற்றும் முருகன் ஆகிய மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் உயிரிழந்த தேவி, சுதர்சன் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதம் மூன்று பேர் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தொழிற்சாலை உரிமையாளர் நரேந்திரன் காவல்துறையினர் அருவருத்தரின் பெயரில் காஞ்சிபுரம் தாலுக்கா காவல்நிலையத்தில் நேரில் ஆஜர் ஆயினார், அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தீயணைப்புத் துறையினர் விளக்கம்
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறை வேலூர் மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தட்பவெட்ப சூழ்நிலை கையாளும் திறன் உள்ளிட்ட காரணங்களால் இந்த தீ விபத்தை ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்
அமைச்சர் நேரில் ஆய்வு
இந்த நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நேரில் சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தார். இதனை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, மிக பயங்கர சத்தத்துடன் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த ஆலை உரிய அனுமதி பெற்று இருந்தாலும், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 10 பேர் மட்டுமே பணி செய்யக்கூடிய இடத்தில், 30 பேர் வரை பணியாற்றி உள்ளனர் இது தவறு இனி இது போன்ற தவறுகள் மாவட்டத்தில் ஏற்படாத வண்ணம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் கண்காணித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தல் கொடுத்துள்ளோம். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, காயமடைந்தவர்களுக்கும் உயிர் இழந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் பெற்று தரப்படும். பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் விதி மீறி செயல்படுமானில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி வி எம் பி எழிலரசன் , மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.