1000 Rs For Ladies: விதை நான் போட்டது...இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகை திட்டத்தை பாராட்டிய கமல்ஹாசன்..!
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம்தான் என கமல்ஹாசன் உரிமை கோரியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். வழக்கத்திற்கு மாறாக இந்த பட்ஜெட்டுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருந்தது.
குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம்:
குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததுதான், பொதுமக்களிடையே பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு இந்த அளவிற்கு அதிகரிக்க காரணமாக இருந்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், அதற்கான அறிவிப்பு வரவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனங்கள் செய்து வந்தனர்.
இதற்கு மத்தியில், ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு பட்ஜெட் தாக்கலில் இடம்பெறும்” என்று உறுதியளித்தார்.
அதன்படி, இன்று தாக்கல் செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு:
இந்நிலையில், இந்த திட்டத்தை பாராட்டியுள்ள மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம்தான் என கூறியுள்ளார்.
மேலும், புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடையாது?
இந்த திட்டம் யாருக்கெல்லாம் கிடையாது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள மாநில சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், "மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோர் பயன்பெற வாய்ப்பில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 மாதந்தோறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் பலன் அடைய வாய்ப்பு உள்ளது.
இந்த நிதியாண்டில் 6 மாதமே உள்ளதால் திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது உரிமைத் தொகை மகளிரின் வங்கி கணக்கில் நேரபடியாக செலுத்தப்படும். உரிமைத்தொகை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.