![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
![கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு Kallakurichi student case: 5 persons, including the school principal, seek bail, postponement of hearing கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/09/d9d9aedf9fee29fe550f506e5c49ff5e_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, மர்மமான முறையில் இறந்தார். அவர் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த 17ம் தேதியன்று மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கொந்தளிப்பாக மாறி கலவரத்தில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது அந்த பள்ளி சூறையாடப்பட்டது. இதனிடையே மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர், வேதியியல் ஆசிரியை, கணித ஆசிரியை ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் (பிரிவு 305), பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் (பிரிவு 75) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரையும் 3 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி புஷ்பராணி, மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று உத்தரவிட்டார். இந்தநிலையில், பள்ளி தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர், பள்ளி ஆசிரியைகள் ஆகியோர் விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டு விசாரணை தொடங்கியது. இதில் நீதிபதி புஷ்பராணி பள்ளி நிர்வாகிகள் 5 பேரை 24 மணிநேரத்திற்கு சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களை விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விவரங்களை சேகரித்தனர். விடுதி அறையில் இருந்து மாணவி எந்த நேரத்திற்கு வெளியே சென்றார், அவர் வெளியே சென்றதை யாரேனும் பார்த்தார்களா? பள்ளியின் 3-வது மாடியில் ஏன் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை
மாணவி எழுதியதாக சமூக வலைதளங்களில் வெளியான கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி ஆசிரியர்கள் யாரேனும் அவரை டார்ச்சர் செய்தனரா என்று கிடுக்கிப்பிடியாக அவர்களிடம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பி, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் 5 பேரும் பதில் அளித்தனர். ஒரு சில கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறியதாகவும் தகவல் வெளியாகியது. சுமார் பத்து மணி நேர விசாரணைக்கு பின்னர், அவர்களை உடனடியாக இரவோடு இரவாக கொண்டு சென்று நீதிபதி புஷ்பராணி வீட்டில் அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர்கள் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கேட்டு மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது, கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஜாமின் வழங்க கூடாது என மாணவியின் தாயார் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)