A.M. Shahjahan: திமுக தோல்வியில் இருந்து பாடம் படிக்ணும்.. அமைச்சர் ஷாஜகான் கொடுத்த அட்வைஸ்!
முஸ்லீம் லீக் கட்சியை விமர்சிக்க ஆ.ராசா. ஆர்.எஸ்.பாரதி, எம்.எம்.அப்துல்லா போன்றோரையும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தையும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

திமுக தோல்வியில் இருந்து மீண்டு பாடம் படிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் காங்கிரஸ், திமுக, அதிமுகவின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதேசமயம் மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். விஜய் என்ற முகம் தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் சேர்ந்திருக்கிறது. இளைஞர்கள், பெண்கள் அதிகம் விரும்பக்கூடிய ஒரு நடிகராக இருந்துள்ளார். கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் தான் ஆகியிருக்கிறது. ஆனால் நற்பணிகளை கடந்த 25 ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். மக்களோடு இணைந்து பயணித்துள்ளார்கள் என்பது தேர்தல் முடிவின் மூலம் நமக்கு தெரிய வந்தது.
திமுக ஆட்சி தான் வரும் என எதிர்பார்த்தோம். முதல் தேர்தலிலேயே தவெக 1.72 கோடி வாக்குகளைப் பெற்றது ஆச்சரியமாகவே இருந்தது. மே 4ம் தேதி தேர்தல் முடிவு வந்தது. பெரும்பான்மை இல்லாததால் முஸ்லீம் லீக் எந்த முடிவையும் எடுக்காமல் திமுகவின் முடிவுக்காக காத்திருந்தோம். மே 7ம் தேதி திமுக தலைமை அழைத்து பேசியது. சமூக வலைத்தளங்களில் வந்த தகவல்களைப் போக மாற்று ஐடியாவெல்லாம் விவாதிக்கப்பட்டது. நாங்கள் அமைதிக் காத்தோம். திமுக முயற்சி பண்ணது நடக்கல. 9ம் தேதி தான் ஆளுநர் ஆட்சி வந்துவிடுமோ என்ற அச்சம் வந்ததால் தான் அவசரமாக பேசி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முடிவெடுத்தது.
எங்கள் சமூகத்தில் இருந்தும் கடுமையான அழுத்தம் வந்தது. தமிழ்நாட்டில் எந்த முதலமைச்சரும் முஸ்லீம் லீக் அலுவலகத்திற்கு வரவில்லை. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் வந்தார். அங்கு விஜய் பேசிய கருத்துகள் தலைவர் காதர் மொய்தீனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிறுபான்மையினர் நலனுக்காக தொடங்கப்பட்ட உங்கள் இயக்கத்திற்கு அதிகாரத்தில் அமர வாய்ப்பு தருகிறோம். மக்களுக்கு தேவையானதை செய்யுங்கள் என சொன்னார்கள். நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்றோம். ஆனால் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் அதனை செய்யவில்லை.
Also Read: Keerthana: அரசுப்பள்ளி அவலம்.. கொந்தளித்த அமைச்சர் கீர்த்தனா.. ரவுண்டு கட்டிய அன்பில், உதயநிதி!
அமைச்சரவையில் முஸ்லீம் லீக் பங்கேற்றது மிகப்பெரிய நிகழ்வு. இனி தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை தான் இருக்கும். அதற்கு முதல் தொடக்கப்புள்ளியாக தவெக தமிழ்நாட்டில் தொடங்கி வைத்துள்ளது. திமுக தோல்வியில் இருந்து மீண்டு பாடம் படிக்க வேண்டும். ஆனால் அங்கிருக்கும் தலைவர்கள் அதனை உணராமல் அவதூறு பரப்புகிறார்கள்.
முஸ்லீம் லீக் கட்சியை விமர்சிக்க ஆ.ராசா. ஆர்.எஸ்.பாரதி, எம்.எம்.அப்துல்லா போன்றோரையும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தையும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். முஸ்லீம் லீக் ஒரு காலத்திலும் அத்தகைய துரோக செயல்களில் ஈடுபடாது. நாங்கள் பணத்துக்காக போனோம் என்றால் 60 வருடமாக நீங்கள் எதை கொடுத்து எங்களைக் கூட்டணியில் வைத்துக் கொண்டீர்கள்?.. திமுக இதனை வேடிக்கைப் பார்ப்பது அவர்களுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது உறுதியாகும்.
திமுகவின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை மீண்டும் மீண்டும் சிறுமைப்படுத்தக்கூடாது. தவறை உணர்ந்து திமுக மீண்டு வர வேண்டும்” எனவும் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















