யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை என பொருள் கொள்வது தவறு - பூவுலகின் நண்பர்கள்
''சட்டரிதியாக யானை வழித்தடத்தை உருவாக்கி, அதை அறிவிக்கும் நடைமுறைகள் நிலுவையில் உள்ளது, அரசு இன்னும் அறிவிக்கவில்லை என்பதற்காக அங்கு யானை வழித்தடமே இல்லை என்று சொல்வது தவறானது''
ஈஷா யோகா மையம் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று RTI-யில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தவறாக புரிந்துக்கொள்ளப்ப்ட்டு செய்திகள் பரப்பப்படுவதாக பூவுலகின் நண்பர்கள் குழு தெரிவித்துள்ளனர். கோயம்புத்தூர், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். அடர்ந்த வனப்பகுதியின் அருகில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த யோகா மையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி இங்கு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் பல ஆண்டுகளாகவே ஈஷா யோகா மையம் பாதுக்காக்கப்பட்ட வனப்பகுதியில் யானைகள் வழித்தடங்களையும், காட்டுப்பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அதே நேரம் அதற்கு ஈஷா யோகா மையத்தின் சார்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் வெள்ளயங்கிரி மலையில் உள்ள ஈசா அறக்கட்டளை மற்றும் ஈசா யோகா மையம் வனப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா என தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்தது.
RTI-யில் கேட்கப்பட்ட 8 கேள்விகள்
1) ஈசா அறக்கட்டளை மற்றும் ஈசா யோகா மையம் எந்த வனப்பகுதியின் பிரிவில் அமைந்துள்ளது? பதில் : கோவை வனப்பகுதி
2) வனப்பகுதியை ஈசா மையம் ஆக்கிரமித்துள்ளதா, அதன் விவரங்கள்? பதில் : இல்லை வனப்பகுதியை ஈசா மையம் ஆக்கிரமிக்கவில்லை
3) வனப்பகுதியில் ஈசா மையம் கட்டப்பட்டுள்ளதா? பதில் : இல்லை வனப்பகுதியில் ஈசா மையம் கட்டிடம் எழுப்பவில்லை
4) ஆதி யோகியின் சிலை இருப்பது வனப்பகுதியா? பதில் : கடந்த கேள்விகளிலேயே பதில் கொடுக்கப்பட்டுள்ளது
5) ஈசா மையம் அருகாமையில் இருக்ககூடிய யானை வழித்தடங்களின் விவரங்கள் என்ன? பதில் : அறிவிக்கப்பட்ட யானை வழித்தடம் எதுவும் கோவை வனப்பகுதியில் இல்லை
6) யானைகள் வாழ்விட பகுதி ஏதேனும் ஈசா மைய பகுதியில் உள்ளதா? பதில் : இல்லை
7) யானைகள் வாழ்விட பகுதியில் கட்டிடம் ஏதேனும் ஈசா மையத்தால் கட்டப்பட்டுள்ளதா? பதில் : இல்லை
8) யானைகள் வாழ்விட பகுதியில் ஈசா மையம் ஆக்கிரமித்துள்ளதா? பதில் : இல்லை
இதில் 5வது கேள்வி தான் மிக முக்கியமானது “ஈசா மையம் அருகாமையில் இருக்ககூடிய யானை வழித்தடங்களின் விவரங்கள் என்ன என்ற கேள்விக்கு, அறிவிக்கப்பட்ட யானை வழித்தடம் எதுவும் கோவை வனப்பகுதியில் இல்லை என பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் குழுவிடம் தொடர்புகொண்டு கேட்டப்போது “தமிழ்நாட்டில் யானைகளின் வலசை பாதைகள் தற்போது வரை கண்டறியப்பட்டு அறிவிக்கபடவில்லை, அதனால் RTI-யில் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு, தமிழ்நாடு வனத்துறை, அறிவிக்கப்பட்ட வலசை பாதை கோவை வனப்பகுதியில் இல்லை, அறிவிக்கப்பட்ட யானைகளின் வழித்தடத்தில் ஈஷா மையம் அமைந்திருக்கவில்லை”என பதிலளித்துள்ளனர்.
Forest conservation act கொண்டுவரப்பட்ட பின், யானையின் வலசை பாதைகளை கண்டறிந்து, அவற்றை காக்க வேண்டும் என்பதேல்லாம் 1990க்கு பின் கொண்டுவரப்பட்டது. அதன் பின் தான் யானைகளின் வாழ்விடத்தை கண்டறிந்து, அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. அதன் அடிப்படையில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, யானைகளின் வழித்தடத்தை கண்டறியும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
அறிவிக்கப்பட்ட யானை வழித்தடம் இல்லை என்பதால் மட்டுமே அது யானையின் வலசை பாதை இல்லை என புரிந்துகொள்வது தவறு. ஆண்டாண்டு காலமாக யானைகள் அங்கே வாழ்ந்து வருகின்றன, வழித்தடமாக உள்ளது. இந்நிலையில் சட்டரிதியாக யானை வழித்தடத்தை உருவாக்கி, அதை அறிவிக்கும் நடைமுறைகள் நிலுவையில் உள்ளது, அரசு இன்னும் அறிவிக்கவில்லை என்பதற்காக அங்கு யானை வழித்தடமே இல்லை என்று சொல்வது தவறானது.
அதனால் யானை வழித்தடத்தை ஈஷா ஆக்கிரமிக்கவில்லை என்று பொருள் கொள்வது தவறு, யானை வழித்தடம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதே சரியானது என வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் தெரிவித்துள்ளார்.