TN Rain Alert: சென்னையை தாக்கப்போகும் புயல்! திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை சொல்லும் தகவல் என்ன?
சென்னை நோக்கி வரும் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4ம் தேதி கரையை கடக்கும் புயல்:
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன், “வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று காலை 5 மணி அளவில் சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
பின்னர் 3 ஆம் தேதி வாக்கில் புயலாக வலுப்பெறக்கூடும் அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி உள்ள வட தமிழக கடலோர பகுதிகள் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே 4 தேதி மாலை புயலாக கரையை கடக்க கூடும்.
எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
அதனைத்தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை மசூலிப்பட்டினத்திற்கு இடையே 4 ஆம் தேதி மாலை கரையை கடக்க கூடும். அடுத்த வரும் நான்கு தினங்கள் பொறுத்தவரையில் வட தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையில் டிசம்பர் 1, 2 தேதிகளில் டெல்டா ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். டிசம்பர் 3 ஆம் தேதி திருவள்ளூர் சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி பெரம்பலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
4 ஆம் தேதி சென்னை, வேலூர், ராணிப்பேட்டை ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பலத்த காற்றுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் டிசம்பர் 3ஆம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான வடகடலோர மாவட்டங்களில் பலத்த காற்றான மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் சமயத்தில் 70 கிலோமீட்டர் வீசக்கூடும். 4 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 80 கிலோ மீட்டர் வேகத்திலும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்” என தெரிவித்துள்ளார்.