(Source: ECI/ABP News/ABP Majha)
ISRO: தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த இஸ்ரோ தலைவர்.. காரணம் என்ன?
குலசேகரபட்டினம் இரண்டாம் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு 2000 ஏக்கர் வழங்கியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்துள்ளார்.
குலசேகரபட்டினம் இரண்டாம் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு 2000 ஏக்கர் வழங்கியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும், இரண்டு ஆண்டுகளில் குலசேகர பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் பணிகள் முடிவடையும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை இஸ்ரோ தலைவர் திரு. சோம்நாத் அவர்கள் சந்தித்த போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். pic.twitter.com/EG1OKcFZOR
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 16, 2023
இஸ்ரோ தமிழ்நாட்டில் இரண்டாவது தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தப்படியாக தூதுக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுதளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆய்வு பணிகளுக்கு பின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 2,300 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏவுதளம் அமையவுள்ள நிலையில், இதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் 99% முடிந்துவிட்டதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்த நிலமும் இப்போது இஸ்ரோ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் ஏவுதளத்திற்கான பணிகள் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்கள் இருந்தும் ஏன் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதாவது குலசேகரப்பட்டினத்திற்கு அண்டார்டிக்காவிற்கும் இடையே எந்த ஒரு நிலைமும் கிடையாது. மேலும் பூமத்திய ரேகைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் இடம் என்பதால் நமக்கு எரிபொருள் செலவு குறையும். இதன் காரணமாகவே குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தலைமைச் செயலத்தில் இன்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சந்திரயான் 3 மாதிரி உருவ சிலையை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் ” இன்னும் இரண்டு ஆண்டுகளில் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் பணிகள் முடிவடையும், அதற்காக தமிழக அரசு 2000 ஏக்கர் நிலம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகம் தற்போது பல்வேறு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது, குறிப்பாக விண்வெளி மற்றும் பாதுகாப்பு தளத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை, மதுரை, திருச்சி கோவை உள்ளிட்ட தமிழகத்தை சுற்றியும் தொழில் வழித்தடங்களை தமிழக அரசு அமைத்து வருவதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஏசியன் விளையாட்டு போட்டியில் தமிழகம் வீரர்கள் 17 பேர் பதக்கங்கள் வென்றது பாராட்டத்துக்குரியது.
இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா 50 ஆண்டுகள் பழமையானது என்றும் ஏவுகணைகள் ஸ்ரீலங்கா வழியாக செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது தற்போது குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் அமைத்தால் எளிதாக சிறிய ராக்கெட்டுகள் செல்வதற்கு உதவியாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திர கிரி ராகெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் விண்வெளி மற்றும் பாதுகாப்பிற்காக தயாரிக்கப்படும் இடமாக தமிழகம் விளங்குவது பாராட்டுக்குரியது” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
செங்கம் அருகே சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; உடல்களுக்கு துணை சபாநாயகர் நேரில் அஞ்சலி